வலியின் வளத்தால் நிமிரும் கூர்மைகள்
அஜந்தகுமாரின் கவிதைகள் ஒரு பார்வை
------------------------------------------------------------
பேராசிரியர் க.பஞ்சாங்கம்(தமிழ்நாடு)
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு ம.இராசேந்திரன் அவர்களின் கடைசி நேர அழைப்பை ஏற்று செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டேன். தங்கியிருந்த விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் சென்னை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி அமைப்பாளர் நண்பர்.அதியமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பேச்சின் ஊடே வேங்கடாசலபதி என்ற பெயரை நான் உச்சரித்ததை என் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தவர் காதும் உள்வாங்கியிருக்கிறது. என் தொலைபேசி உரையாடல் எப்போது முடியும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தவர் போல பக்கத்தில் இருந்த அந்த நண்பர் “ஐயா! நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன்; தாங்கள் யார் என்று அறியலாமா! சலபதியை உங்களுக்குத் தெரியுமா!” என்று கண்ணில் ஆசை ததும்ப மொழியாடினார். என் பெயரைச் சொன்னவுடன் “ஐயா! நீங்களா! உங்களைத் தான் பாக்கணும்; உங்கள் எழுத்துக்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்திருக்கேன்! உங்களுக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டமே அங்க இருக்கு! உங்களைச் சந்தித்ததிலே எனக்கு ரொம்ப ஆனந்தம்;” இப்படிப் பொருள்படும் யாழ்ப்பாணத் தமிழில் பரபரப்புடன் பேசினார். இளைஞராக இருந்தார்; அஜந்தகுமார் என்கிற இந்தக் கவிஞர் இப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார். உண்டு முடித்தவுடன் பேசிக் கொண்டே எனது அறைக்கும் வந்துவிட்டார்; இரவு பதினொரு மணி வரைக்கும் பேசிக் கொண்டிருந்தோம்; தமிழ்நாட்டில் இந்த இளம்வயதில் இந்த அளவிற்கு விவரமான, ஆழமான ஓர் இலக்கிய ஆசிரியரைக் காண்பது அரிது என என்னைச் சொல்ல வைத்தார். ‘சிறுபான்மையினர்’ என்கிற உண்மை, வலியையும் துன்ப துயரங்களையும் கூடவே வைத்திருப்பது போல அறிவுவளத்தையும் கூர்மையான நுண்ணுர்வையும் அதிகமாகவே வழங்கிவிடும் போலும் என்றும் என்னை எண்ண வைத்தார். அப்படியே தூங்கிப் போனேன்; காலையில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது; ‘ஒரு சோம்பேறியின் கடல்’; என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பை மிகுந்த தயக்கத்துடன் வழங்கினார்.
பொதுவாகக் கவிதை தனது அகத்திற்குள், பழைமைகளுக்குள், ஆசைகளுக்குள், கனவுகளுக்குள், இயலாமைகளுக்குள், குற்ற உணர்வுகளுக்குள், தோல்விகளுக்குள், இழப்புகளுக்குள், பிழைகளுக்குள், கவலைகளுக்குள், புண்களுக்குள் தன்னைப் பயணிக்க நிர்ப்பந்திப்பது; நாவல் போன்ற மற்ற இலக்கிய வடிவங்கள், புறம் சார்ந்தவை; தனக்கு வெளியே சிறகை விரிக்க வேண்டுபவை; இந்தச் சூட்சுமம் அஜந்தகுமாருக்கு இந்த இளம் வயதிலேயே தெரிய வந்ததும் அதன்படிச் சரியாகவே வினைபுரிய முடிந்ததும்தான் ஆச்சிரியப்படத்தக்கவை. ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பில் தன்னைத்தான் தட்டிக் கொடுத்துக் கொள்கிறான்; தன்னைத்தான் தோண்டி தோண்டி அகழ்வாராய்ச்சி செய்து புருவங்களை உயர்த்தும் படிமங்களையும், பாசிகளையும் கண்டெடுத்து மொழிப்படுத்துகிறான். தன் இருப்போடு அவன் நிகழ்த்துகிற சமர்தான் அவன் கவிதையாக வெளிப்படுகிறது. பேரினவாதம் அதன் கொடூரமான உச்சக்கட்ட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற இருட்சூழலில், எங்கும் அச்சமும் பீதியும் அலறலும் ஓலமும் மரணத்தின் நெடியும் சூழ்ந்திருக்கிற ஒரு நெருக்கடியில், தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வு குறித்தும், தன் இயலாமை குறித்தும், கையறுநிலை குறித்தும், குற்ற உணர்வினால் குமையும் ஒரு ஆன்மாவின் அர்த்தம் செரிந்த சுய விமர்சனமே இங்கே ‘ஒரு சோம்பேறியின் கடலாக’ நம்முன் விரித்துக் காட்டப்படுகிறது.
கத்திக் கொண்டிருக்கும் ப+னையாய் (ப.16) அந்தக் குற்ற உணர்வு நடுச்சாமத் தூக்கத்தையும் கலைக்கிறது. வாழ்தலின் அச்சம் தலையணையைத் தூக்கி எறிந்து அந்தப் ப+னையை விரட்ட முயல்கிறது. ஆனாலும் ப+னையின் சத்தத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்தச் சத்தத்திற்காகத் தூங்காமலும் இருந்துவிட முடியவில்லை. கவிஞர் எழுதுகிறார்:
செல்லடியே தாலாட்டாய்
மாற்றங் கண்ட புத்திரனல்லவா?
நான் தூங்கிப்போனேன் (ப.17)
எத்தனை இரவுகளில்பட்ட வேதனையின் பிரசவ வெளிப்பாடு இந்த வார்த்தைக் கோலங்கள்.
இருப்பைக் குறித்த இந்தச் சுய விமர்சனம், ஏதாவது ஒரு கிளையில் தன்னிலையைச் (ளுரடிதநஉவ) செலுத்த முயல்கிற அதே கணத்தில் எது நிஜம், எது நிழல் என்கிற அடுத்தக்கட்ட பிரச்சினை ப+தாகரமாக வடிவெடுத்து முன்னிற்கின்றது. இந்நிலையில் நிஜத்திலிருந்து விலகி மாயையில் சிக்கிக் கொள்வோமோ என்கிற அச்சம் தன்னிலையைத் தின்னத் தொடங்கி விடுகின்றது. இப்படித் தின்னக் கொடுத்த நிலையில்தான் இப்படி ஒரு கவிதை உருவெடுக்கிறது.
எதிலுமோர் நிழலின் தோற்றம்
தவிர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது
நிழலுக்கும் நிஜத்துக்குமான
இடைவெளிச் சுருக்கம்
ஏதோவொரு மாயையைச் சிருஷ்டித்து
உண்மையைப் பதுக்கிவைத்திருக்கிறது (ப.3)
இப்படி நிஜத்தின் பக்கம் நெருங்க முடியாத சூழலில் தன்னிலை இருளில் கிடந்து இவ்வாறு தவியாய்த் தவிக்க நேர்கிறது.
என் காலங்கள் எல்லாவற்றிலும்
இருளின் பற்கள் கோரமாய் முளைக்கின்றன
நானே எனக்குக் கனத்து நசிந்தபடி
இருளின் பற்களிடை
சப்பப்படுகிறேன்
ஜாதகப் புத்தகத்தின்
பழுத்த தாள்களிடை
இறந்து போய்
ஒட்டிக் கிடக்கும் ப+ச்சியாய்
இந்த வாழ்வோடு
ஏதோ ஒட்டிக் கிடந்தபடி
என் வாழ்வு,
என் கண்களிடை மங்கலாய்த் தெரிகிறது (பக் 74-75)
இவ்வாறு ‘வலியின் வளத்தால் நிமிரும்’ குணங்களின் கூர்மைகளாய் வார்த்தை வடிவமெடுக்கும் இந்தக் கவிதைகள் பள்ளி, வீடு, பாசிபடிதல், காயம், மழை, வெயில், சிற்பம், உயிர், நான், அவள், ஒளிப்பிழம்பு, புன்னகைகளின் விசங்கள், ஈக்கள் கலந்த தேநீர்க் கோப்பை, கடல், நிர்வாணத் தெரு, வண்ணத்துப் ப+ச்சி, அச்சக்கோடுகள், கனவு, கானல், காதல் முதலிய படிமக் குறிகள் மூலம் கவித்துவ உருவாக்கம் என்கின்ற கடும் வினையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. பொதுவாகக் கவிதையில் பயன்படுத்தப்படும் வார்த்தை ஒவ்வொன்றும் நேரடியான அகராதிப் பொருள் கொண்டவை அல்ல் ஒற்றைப் பொருளை நோக்கியவையும் அல்ல் பன்முகப்பட்ட பொருளையும், தொனியையும் தனக்குள் கொண்டவை. பல்வேறு அர்த்த அடுக்குகளை உற்பத்தி செய்து கொள்வதற்குத் தோதுவாகத் தம்மைச் சமைத்துக் கொண்டவை; இத்தகையக் கவிதை மொழியை அஜந்தகுமார் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதன் மூலம் தன் உணர்வுகளை நேரடியாக வெறும் உணர்வுகளாக வெளிப்படுத்தாமல் அனுபவமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. “மொழிக்குள் எந்தளவிற்கு மறைந்து கொள்கிறோமோ அந்தளவிற்கு அதிகமாக வெளிப்படுவோம்” என்பது கவிதையாக்கத்தின் அறம். அந்த அறத்தை அஜந்தகுமார் அற்புதமாக வளைத்துப் பிடித்துள்ளார். கவிதையாக்கத்தின் இந்தத் தந்திரத்தை அறியாதவர்கள்தான் நேரடியான அரசியல் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இல்லையே என்று முன்னுரையில் கவிஞர் சுட்டிக்காட்டுவது போலக் குறைபட்டுக் கொள்ளலாம். இது கவிஞரின் குறையல்ல் கவிதை குறித்த அவர்களின் புரிதல் குறைதான். போர்ச் சூழலில் வாழச் சபிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் இதயத்துடிப்புகளின் ஓசையாக நான் இந்தக் கவிதைகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். கவிதை வாசகனுக்குள் சத்தத்தை எழுப்பக் கூடாது; மௌனங்களை உற்பத்தி பண்ண வேண்டும்.
நட்சத்திரங்களால் வானம்
சிதறிக் கிடக்கிறது (ப.51)
சுவரும் நானும்
பார்வைகள் சப்பிச் சலிக்கிறோம் (ப.62)
நான் கருகும் வாசம்
என்னையே ஒங்காளிக்க வைக்கிறது (ப.66)
எல்லோரிடமும் ப+த்துக் குலுங்கும் புன்னகை
என்முகம் கண்டதும்
ஓடிக் கொள்கிறது
புன்னகை கொல்லும் பாவம்
புதைகிறது என்னுள் (ப.54)
சொற்களின் கவலை
நாளெல்லாம்
உன் முகத்தில்
எழுதப்பட்டு கிடக்கட்டும்! (ப.24)
அஜந்தகுமாரின் இத்தகைய வரிகளை வாசிக்கிற யாரும் “பிரபஞ்ச வெளியில் நிறைந்து கிடக்கும் அவருடைய கவலைகள்” மூலம் தங்களுடைய கவலைகளைக் கண்டு மௌனம் காப்பதும் அதன்மூலம் தன்னைத் திரட்டிக் கொள்வதும் தவிர்க்க முடியாத வினையாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. தம் முன்னுரையில் அஜந்தகுமார் இவ்வாறு எழுதுகிறார்:
சொற்களின் மீதான பித்தும் பிரியமும் பெருகியபடியே இருக்கிறது.
சொற்கள் ஒரு பாற்கடலாய் என் முன் விரிந்து அலையெறிந்தபடியே
இருக்கின்றன. என் அனுபவ உடலோடு அதில் இறங்குகையில் இனம்
புரியாப் பரவசம் என்னை ஆட்கொள்கிறது… நானும் என்
அனுபவங்களும் சொற்களோடு போராடித் தோற்றபடியே திரும்ப
வேண்டியிருக்கிறது.
அன்புள்ள அஜந்தகுமார்! தோற்கிறோம் என்கிற உங்களின் இந்த விழிப்புணர்வுதான், உங்கள் கவிதைக்கான ஆதார சக்தி. தோல்வியிலிருந்துதான் எல்லாப் படைப்புகளும் உற்பத்தியாகின்றன. உங்களுக்குள் தோல்வி இருக்கிறது; எனவே கவிதை இருக்கிறது. உங்கள் பணி தொடரட்டும்.
காசி இல்லம் பெருகும் அன்புடன் க. பஞ்சாங்கம்
புதுச்சேரி-8
14.09.2010
நன்றி - ஜீவநதி நவம்பர் 2010