த. அஜந்தகுமார்
---வெற்றிவேல் துஷ்யந்தன்


இலக்கிய வடிவங்களில் மிகப்பழைமை வாய்ந்த ஒரு இலக்கிய வடிவமாகக் கொள்ளப்படுவது கவிதை இலக்கியமாகும். ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட காலங்களில் பல்வேறுபட்ட படைப்புகள் தோன்றியிருப்பினும் அவற்றைத் தொகுப்புருவாக்கம் செய்கின்ற தன்மை அரிதாகக் காணப்பட்ட காலங்கள் இலக்கிய வரலாற்றில் இருந்ததுண்டு. இருப்பினும் சமகால இலக்கிய உலகினிலே படைப்புகளின் அதிகரிப்பும் மகோன்னதமும் காரணமாக படைப்புகள் நூலுருவாக்கம் பெறுகின்ற தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது. புத்திரிகைளிலும் சரி சஞ்சிகைகளிலும் சரி வெளியாகின்ற படைப்புகள் நூலுருவாக்கம் பெறுகின்ற போது வாசகர் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. அந்தவகையில் அண்மையில் வெளிவந்த த.அஜந்தகுமாரின் ‘ ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசக நிலை நோக்காகவே இது அமைகின்றது.
அம்பலம் குழுமத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற இத்தொகுப்பினுள் மொத்தம் முப்பத்தெட்டுக்கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. எந்தவொரு படைப்பும் தொகுப்புருவாக்கம் அடைகின்ற போது படைப்பினுடைய உள்ளடக்கத்தினையும் தாண்டி படைப்பின் மீதான ஆர்வத்தை வாசகனுக்குத் தூண்டுவது படைப்பினுடைய முகப்பு. அந்தவகையில் இத்தொகுப்பின் அட்டைப்படம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அண்மைக்கால இலக்கிய அறுவடைகளில் சற்று வித்தியாசமாகவும், சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்து இருக்கின்றது. சமகால கவிதை இலக்கியத்திலே இளையோரின் ஆதிக்கநிலை பல்கிப் பெருகிவரும் இக்காலகட்டத்தில் வித்தியாசமான படைப்புகளையும், உன்னதமான படைப்பகளையும் எழுதிவரும் படைப்பாளிகளுள் த.அஜந்தகுமார் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
ஒரு படைப்பாளியின் பகைப்புலம், சமூகவாழ்வு என்பவற்றின் பிரதிபலிப்பே அவனுடைய படைப்பி;ல் அதிக தாக்கத்தை செலுத்திவருகின்றது. மனித மனம் விந்தையானது. அதிலும் கவிதை மனம் விந்தையிலும் விந்தையானது. இத்தொகுப்பினுள் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் சமூகவாழ்வினோடும் அனுபவத்தினோடும் பின்னிப்பிணைந்து உள்ளன.
கவிதை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் மொழியின் பங்கு காத்திரமானது. கவிதைக்கூடாக வெளிப்படுத்தப்படும் உணர்வுகளையும், கருத்துகளையும் வாசகனுக்கு எளிதில் புரியவைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது. அஜந்தகுமாரின் அனைத்துக் கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள மொழிகள் மிகவும் அற்புதமானவையாகவும் பிரக்ஞை பூர்வமானவையாகவும் காணப்படுகின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘புதிர்ப்பொழுதும்’ வாழ்வும் ‘ என்ற கவிதையில் வருகின்ற ,
“எனதிருப்பின் நிர்ணயங்கள்
நிர்வாணப்படுத்தப் படலாயிற்று
எனதிருப்பின் நிர்மூலம் குறித்த மூலம்
எங்கென்று தேடலுறும் திடத்தோடு
என் ஆத்மா அவதியுற்று
அலைந்து திரியத் தொடங்கலாயிற்று”
என்ற வரிகளில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் மொழி அற்புதமாகவும் உயிரோட்டமாகவும் இருக்கின்றது.இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள புரையோடிப் போன எமது போர்க்கால வாழ்வியலின் விசும்பல்களை குறியீட்டு ரீதியாகவும் யதார்த்தபூர்வமானவையாகவும் ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கத்திக்கொண்டிருக்கும் பூனை’ என்ற கவிதையில்,
“ செல்லடியே தாலாட்டாய்
மாற்றம் கண்ட புத்திரனல்லவா?
நான் தூங்கிப் போனேன்”
என்ற வரிகளில் யதார்த்தபூர்வமான வாழ்வனுபவங்களை தத்ரூபமாகப் படம் போட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
இத்தொகுப்பின் ஆசிரியர் த.அஜந்தகுமார் தமிழை சிறப்புப் பாடமாக பல்கலைக்கழகத்தில் கற்றதனாலும், தற்போது தமிழ்த்துறை உதவி விரிவுரையாளராக இருப்பதனாலும் என்னவோ தமிழுக்கு செழுமை சேர்க்கும் சொற்களை பேனாமுனையின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில கவிதைகள் வாழ்வியலில் மனிதனுக்கு அவனுடைய சக்தியையும் மீறி அவன் வாழுகின்ற சூழல் அவனுக்கு சில யதார்த்தத் தெறிப்புகளையும் உண்டு பண்ணிவிடுகின்றது என்பதையும் கூறி நிற்கின்றன. அந்த வகையில் ‘சிறகில்லா வாழ்வில் செல்லல்’ என்ற கவிதையில்,
“ பறப்பதற்குத் துடிக்கின்றன
எனது சிறகுகள்
………………………
வாழும் சூழல்
என்னை அமத்திப் பிடித்து
அச்சுறுத்தல் செய்கின்றது”
என்ற வரியூடாக ஆசிரியர் ஒரு காலத்தின் அடையாளத்தையே கூறி அற்புதமாக காட்டியிருக்கிறார்.
இலக்கியங்கள் என்பவை ஒரு காலத்தின் கண்ணாடி என்ற பொதுமைப்பட்ட கருத்தியலுக்கான எதிர்வினைகள் தோற்றம் பெறும் இக்காலகட்டத்தில் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிதான் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் அஜந்தகுமாரின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. இத்தொகுப்பி;ல் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் அற்புதமான மொழிநடை, படிமங்கள், யதார்த்தம் என்பவற்றின் அதீத வினைத்திறன் காரணமாக ஏதோ ஒரு செய்தியை வாசகனுக்கு புலப்படுத்தத் தவறவில்லை.
எந்தவொரு படைப்பிலும் காதலியம்சார் உணர்வலைகள் இடம்பெறும் போது விரும்பியொ விரும்பாமலோ அந்தப் படைப்பு வாசகனுக்குத் தீனிபோட்டு விடுகின்றது. த.அஜந்தகுமாரின் கவிதைகளில் பெரும்பாலும் காதல் உணர்வுகள் குறியீட்டுரீதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும் ‘நீயெனக்கு இல்லையென்றாகிவிட்ட இந்த இரவு’ என்ற கவிதையில்,
“ ………………
சொல்லமுடியாத் துயர்
விழிகளில் இரத்தமாய்க் கசிய
நீர் மறைத்து வலியின் சுழிப்போடு
உதடு பிரியா அவஸ்தையோடு
விடை கொடுத்தேன்”
என்ற வரியினூடாக நேரடியாகவே காதல் உணர்வை வெளிப்படுத்தி நிற்கிறார் ஆசிரியர். இவ்வரிகள் வாசகனிடம் காதல் உணர்வை மிக ஆழமாகக் கடத்திவிடுகின்றன.
தொகுப்பினுள் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் காணப்பட்டாலும்கூட பல்லி +வீடு+ நான்+அவள், ஒளிப்பிழம்பை வினாவுதல், அநிச்சயக்கோடுகளில் உதிரும் புன்னகைகள், அகால மரணத்தின் வாசல், நிலைத்தலின் பாங்கு போன்ற கவிதைகள் வித்தியாசமானவையாகவும் விதந்து பாராட்டப்பட வேண்டியவையாகவும் இருக்கின்றன.
த.அஜந்தகுமாரின் படைப்புலகம் பரந்துபட்டது. தனியே கவிதையுடன் மட்டுமல்லாது சிறுகதை,கட்டுரை, பத்தி, விமர்சனம் போன்ற துறைகளிலும் தனது பார்வையினை அகலமாக விரித்திருக்கின்றார். அஜந்தகுமாரின் படைப்புகளின் தீவிர வாசகன் என்ற ரீதியில் ஒன்றைக் கூறிக்கொள்ளவேண்டும். இத்தொகுப்பில் இடம்பெற்றவைதான் அஜந்தகுமாரின் மிகச்சிறந்த கவிதைகள் என்றில்லை. இவை தவிர இன்னும் பல மிகச் சிறந்த கவிதைகள் இருக்கின்றன. அவற்றையும் இத்தொகுப்பில் உள்ளடக்கியிருக்கலாம் என்பதே என்னுடைய அவா.
சமகால இலக்கியத்தில் தொகுப்புருவாக்கம் உன்னதமான வளர்ச்சியை அடைந்து வரும் இக்கால கட்டத்தில் தன்னுடைய அத்தனை கலைவெளிப்பாடுகளையுமு; உள்ளிருத்தி ஈழத்து கவிதை இலக்கியத்திற்கு ‘ஒரு சோம்பேறியின் கடல்’ என்ற காத்திரமான ஒரு பெறுமதியான படைப்பினை வழங்கிய அஜந்தகுமார் என்றுமே பாராட்டப்படக்கூடியவர். ஈழத்து நவீன கவிதை இலக்கியத்தில் ‘ ஒரு சோம்பேறியின் கடல்;’ என்ற தொகுப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இறுதியாக, இந்தத் தசாப்தத்தின் ஆரம்பத்தில் கவிதைத் தடாகத்தில் பயணிக்கத் தொடங்கிய அஜந்தகுமார் என்னும் படகு இத்தசாப்தத்தின் இறுதியில் முதற்கட்டமாகத் தன்னுடைய இலக்கை அடைந்து வெற்றியும் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நன்றி:
படிகள்
ஜனவரி 2010
0 Responses

Post a Comment