த. அஜந்தகுமார்

வலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள்
தங்கள் பாதைகளில்
வலிகளை
வழித்துணை ஆக்கினர்
கண்களில் கசிந்த நீரினை
வியர்வையில்
மறைய வைத்தனர்
முதுகில் சுமையும்
நெஞ்சில் சுமையும்
நிர்ந்தரியாய் இருப்பதை மறந்தனர்
விசாரிப்புகளில்
மற்றவர்கள்
சொல்லும் போதே
தங்கள் வலிகள்
நினைவுக்கு வந்து அழுதனர்

ஓலமிட்டழுத கதைகள்
ஒதுங்கிக் கிடந்தன
ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது
ஈரத்தில் தலைசாய்க்கிறார்கள்
கண்கள் மூடப்பட்டு இருக்கிறது
ஈரம் எப்பொழுதும் நினைவுபடுத்து்ம்
உணர்வுகள் இடையே 
துாக்கமும் சாத்தியமாகவே செய்கிறது
கனவுகள் தேவையற்றதாகிவிட்டன
குப்பைகளுடன் கனவுகளும் இருக்கட்டும்
பூனை விராண்டிக் கொண்டிருப்பது போல்
ஏதேதோ நடக்கிறதுதான்
ஆனால் எல்லாமே 
நடக்கவே செய்கிறது

வலிகளுடன் வாழ்பவனை நீ விசாரியாதே
புண்ணை மூடும் தோலினை
சுரண்டிப் பார்க்காதே
கண்ணீர்க் கதைகளை கேட்டு
கண்ணீரில் ஏன் கதைகளை எழுத வைக்கிறாய்
விட்டு விடு

விசாரிக்கப்படாமலே
வலிகள் இருக்கட்டும்

வைரத்துடன் 
நாளை அவர்கள் வருவார்கள்

வைரம் அவர்களின் அழகைப் பேசும்
வெற்றியின் கதையை
அவர்கள் அப்போது பேசட்டும்