--- தி. செல்வமனோகரன்
“ஒரு கவிதை இருக்கவேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம்போல மௌனமாய்
பேச்சற்று
புராதன பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்
பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மௌனமாய்
ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல்
..............................
ஒரு கவிதை காலத்தினுள் சலனமற்று இருக்கவேண்டும்
நிலா உயர்வதைப் போல
...............................
ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது
கவிதையாக இருக்க வேண்டும்”
(கவிதைக்கலை - ஆர்க்கிபால்ட் மேக்லிஷ்)
ஒவ்வொரு மொழியினதும் தனித்துவமானதும் செப்பமானதுமான வடிவம் கவிதை. பொதுவில் கவிதைகள் சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் வெறும் சொற்கள் கவிதையாகிவிடா. கவிதை, சொற்கள் - வரிகள் - அவற்றிற்கிடையிலான பெரு மௌனம் என்பவற்றால் உருவாவது. மௌனமே அதன் பேரம்சம். சொற்களும் - வரிகளும் தமக்கு இடையில் தம் கூர்மையை இழக்காது பயணிக்கும் இடையறாத உறவே அவற்றிற்கிடையிலான வலிதான மௌனமே அக்கவிதைக்கு ஆழத்தையும் தனித்துவமான சிறப்பையும் அளிக்கவல்லதாகிறது. வார்த்தைகள் அர்த்தமிழந்துவிட அவற்றிற்கு இடையில் வரும் மௌனவெளி வளர்ந்து பூதாகரமான விருட்சமாகி நிற்கும். காலத்தின் சிதைந்த வெளிகளில் படைப்பாளி தன்னையும் தன் பிரபஞ்சத்தையும் மீட்டுக் கொள்வதோடு மீள்கட்டமைத்துக் கொள்வதுமாக அமையும். “மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட ஒரு பேச்சே வாழ்க்கை” என்பார் ஜோசப் ப்ராட்ஸ்கி. அவ் வாழ்க்கைச் சுழல் ஓட்டத்துள் அகப்பட்ட படைப்பாளிக்கு தானாகக் கிடைப்பது அல்லது தரப்படுவதே கவிதை. அவன் வாழ்க்கையை அது தரும் அனுபவத்தை தன் பிரபஞ்ச வெளிக்குள்ளும் அப்பாலும் பிரக்ஞைபூர்வமாக சொற்களால் கட்டமைத்து நிற்கின்றான். இக் கட்டமைத்தல் சொற்களின் அர்த்தங்களையும் காலத்தையும் உடைத்தெறிந்து பிரவாகித்து நிற்கும்போதே அது கவிதையாகிறது.
அஜந்தகுமார், வளர்ந்துவரும் இளம் படைப்பாளி. ‘ஒரு சோம்பேறியின் கடல்’ எனும் நூல் அவரின் முதற் கவிதைத் தொகுப்பாகும். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவி விரிவுரையாளரான அஜந்தகுமார் இரண்டாயிரமாண்டிலிருந்து கவிதை எழுதி இருந்தாலும் 2004 - 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதிய முப்பத்தெட்டுக் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அம்பலக் குழுமத்தால் வெளியிடப்பட்ட இந்நூலின் வித்தியாசமான, அழகான அட்டைப்படத்தினை பா. அகிலன் வடிவமைத்துள்ளார். (அட்டைப் படம் பற்றிய விபரம் இல்லை)
இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தனிமனித பிரக்ஞைக்கு அழுத்தம் கொடுத்து நிற்கின்றன. காதல், மன அவசங்கள், சுய மதிப்பீடு, போர், வாழ்வியல், நம்பிக்கையீனங்கள், நம்பிக்கைகள் எனப் பல தளங்களில் இவரின் கவிதைகள் விரிய முற்பட்டுள்ளன. தாயன்பின் முன்னால் ஒரு மகனின் ஆசைகள் சிதைந்து போவதை அதனால் ஏற்படும் மன அவசத்தை
“அம்மா ஒவ்வொரு நாளும்
தன் கனவுகளை
கண்ணீரில் தோய்த்தெடுத்து
கைகளிலே தருகின்றாள்
பாசம் முன்வந்து
மோதி நிற்கின்றது
எல்லாச் சிறகுகளையும்
என் கைகளாலேயே
ஒடித்துப் போடுகிறேன்”
(சிறகிலா வாழ்வில் செல்லல்)
என அழகுற வெளிப்படுத்தி நிற்கின்றது. ‘ஒளிப்பிழம்பை வினாவுதல்’ எனும் கவிதை, துன்பம் துன்பத்தைப் பொறுமையோடு கடக்க முற்படல், இயலாமை, அதனால் வரும் கோபம் - துக்கம் எனப் பல்வேறு பிரக்ஞைகளைக் கலந்து தருகிறது.
“நான்
மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கிக் கதறியழ
நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு!
நெற்றிக் கண்ணில் இருந்து
பிள்ளைகளை உற்பவி!
என வரும் வரிகள் சமூக யதார்த்தமாகவும் கன்னத்தில் அறையும் உண்மையாகவும் உள்ளன.
ஈழத் தமிழர்களின் வாழ்விலும் படைப்புக்களிலும் அதிக இடத்தைப் பிடித்துவிட்டவை போர் தந்த ரணங்கள். அவை மாறாத - மறையாத ஒன்றாய்க் கலந்து கிடக்கின்றன. ஒவ்வொரு ஈழத்தமிழனது வாழ்வும் கேள்விக்குறியாகி மரண விளிம்பில் நின்று அவன் பட்ட அவஸ்தையை,
“எனது இரகசியங்களின்
திசைவழிப் பயணங்களை
பிசைந்தபடி செல்கின்றது
இருளின் கரம்!”
(ஞாபகங்களின் அச்சக்கோடுகள்)
“செல்லடியே தாலாட்டாய்
மாற்றங்கண்ட புத்திரனல்லவா!”
எனும் வரிகளால் அஜந்தகுமார் புலப்படுத்துகின்றார். வாழ்வியல் யதார்த்தத்தை ‘நிலைத்தலின் பாங்கு’ எனும் கவிதையில் ஒன்றின் வீழ்ச்சி மற்றொன்றின் எழுச்சி என்பதை
“அவன் விழிகளின் உயிர்ப்போடு
சிற்பமும் மிளிர்ந்து நிமிர்ந்தது
சிற்பி செத்திருந்தான்
சிற்பம் உயிர்த்திருந்தது!”
என்பதனூடாக உணர்த்த முற்பட்டுள்ளார்.
கனவுகளோடு புறப்படும் இளைய தலைமுறை சமூக வாழ்க்கையில் முட்டிமோதி துயரங்களை மட்டுமே பதிலீடாகப் பெறும்போது தன்மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கையீனம் கொண்டுவிடுகிறது. தவறான முடிவுகளை நோக்கி நகரத் தொடங்குகிறது.
“துயரின் நிலைத்த வாழ்வில்
பெயர்ந்திடா அதன்
தன்மையின் பலத்தில்
பின்னடைந்து போய்
அழுகிறது கண்!”
(பாசி படிதல்)
மேற் சொன்ன வரிகள் நம்பிக்கையீனத்தின் சான்றாக அமைகின்றன. ஆயினும் அதனின்றும் மீண்டெழும் வேணவாவும் இவரின் கவிதைகளில் உள்ளன. உதாரணமாக
“காத்திருத்தல்
கானலென்ற உண்மையைக்
கணங்கள் ஒவ்வொன்றும்
கதைகதையாய்ச் சொன்னாலும்
நம்பிக்கை மட்டும்
சிதையாது தேங்கிற்று”
(நீண்ட காத்திருப்பு)
எனும் வரிகளைச் சுட்டலாம். இவ்வாறு வாழ்வியல் பேரவலத்தால் சிக்குண்டு தவிக்கும் படைப்பாளி தன்னைத் தான் சுயமதிப்பீடும் செய்துகொள்கிறார். தனது சின்ன வட்டத்துள் அடங்கிப்போன வாழ்வுகூட சிதைந்தழிந்து போகுமோ என்ற ஏக்கமும் அதிகம் புதிர்ப் பொழுதுகளைத் திணித்தபடியே வாழ்வு போய்க் கொண்டிருக்கிறது என்ற தெளிவும் (புதிர்ப் பொழுதுகளும் வாழ்வும்) அவரிடம் இருக்கிறது.
‘கத்திக் கொண்டிருக்கும் பூனை’, ‘ஒரு தேவதையின் ஒளிக் கவிதை’ போன்ற சில கவிதைகள் வாசகனுக்குப் பல்வகைமையான வாசிப்புக்களைத் தரவல்லனவாய் உள்ளன. பிரக்ஞைபூர்வமான படைப்பாக்கத்தில் வார்த்தைகளைக் கவிதைகள் பயன்படுத்திவிட்டு, அவற்றை நீறாக்கி விடுவதையும் கவித்துவச் செறிவு மேலோங்குவதையும் சில இடங்களில் காணமுடிகிறது.
“கோபத்தோடு உன்தெரு
காறி உமிழும் புழுதி”
(உன்னை வினாவுதல்)
“என்னைச் செரிக்கும்
வலிகளின் நிமித்தம்
சொற்கள் வரமுடியாது
மௌனம் பிசைகிறது”
(சொற்கள் பற்றிய இரண்டு கவிதைகள்)
என்பவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். ‘புள்ளியின் கிறுக்கல்’, ‘மயிர்க்கொட்டியும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘நிர்வாணத் தெருவும் கவிஞனின் வலியும்’, ‘ஆர்ப்பரிக்கும் என் கடல்’ போன்ற இன்னும் சிலவும் தமது இலக்கினை ஓரளவேனும் தொட்ட கவிதைகள் எனலாம். ‘மறந்து போனேனா’, ‘சொல்லலங்காரம் மிகுந்த உன் தவறும் என் சக்தியும்’ போன்ற கவிதைகள் இத் தொகுப்புக்கு நலிவைத் தருகின்றன. ‘எதிர்காலம் குறித்து...’ என்னும் கவிதையின் முற்பகுதி
“வாழ்வுக்கான வேர்கள்
உன்வசமே ஊன்றியுள்ளன
புடைத்து வளரும் விருட்சம்
உன்வேரில் இருந்து விடுபடின்
வாட்டம் கண்டு வீழும் என்பதை
நீயறிவாயோ....”
என அமைந்துள்ளது. “வாழ்வுக்கான வேர் உன்வசமே ஊன்றியுள்ளன” எனும் வரி தன்னை விருட்சமாகவும் முன்னிலையாளரைத் தன்வேர் பற்றி நிற்கும் மண்ணாகவும் சித்திரிக்கிறது. ஆனால் அடுத்த வரி ‘விருட்சம் உன்வேரில் இருந்து விடுபடின்’ என வருகிறது. ‘உன்னுள்ளே வளரும் வேர்கள்’ என்னும் வரியும் முன்னிலையாளரை ‘மண்’ ணாகவே சித்திரிக்கிறது. இது கருத்து முரண்பாட்டைத் தருகிறது. ‘உன் வேரில்’ எனும் சொற்றொடர் தவறாக உள்ளது. இது ‘உன்னில்’ என்றே வரவேண்டும். அதேபோல ‘மழை எழுதிய எதிர்வினை’ என ஒரு கவிதைத் தலைப்பு அமைந்துள்ளது. ஆனால் கவிதை,
“மழை குறித்த வாசிப்பு
எதிர்வினை ஒன்றை
என் தலைக்குள்
எழுதிச் சென்றது” என வருகிறது.
ஆக, மழை குறித்த “வாசிப்பே” எதிர்வினையை எழுதியது மழையல்ல. அப்படியாயின் கவிதைத் தலைப்பு “மழை குறித்த வாசிப்பு” என்றே இடம்பெற்றிருக்க வேண்டும்.
கவிதையில் தேவையின் பொருட்டோ மிக அழுத்திச் சொல்லும் பொழுதோ மீள மீள ஒரே சொற்களைக் கையாளுதல் வழமையும் பொருத்தப்பாடும்கூட. ‘வீரம் குறித்த ஒரு கேள்விக்குரல்’ எனும் கவிதையில் ஏழு இடங்களில் “என்” எனும் சொல் வந்துள்ளது. இது கவிதையின் செறிவை நொய்மைப்படுத்துகிறது. அதேபோல ஒத்ததன்மையுள்ள சொற்கள் ‘காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை’ எனும் கவிதையில் கையாளப்பட்டுள்ளன. முதல்வரி
“நீ ஒன்றும் பேசாது பறையாது
உம்மென்றபடி இருக்கின்றாய்”
என்றுள்ளது. பேசாது - பறையாது என்பன இருவேறு பொருட்களையோ உணர்வுகளையோ தரவில்லை.
கவிதை வரிகள் பல ஒருமை பன்மைப் பிழைகளைக் கொண்டமைந்துள்ளன. நல்ல கவிதையில் சொற்கள் அர்த்தம் இழந்து போய்விடும் என்பதால் இவை முக்கியமில்லை எனச் சிலர் வாதிடவும் கூடும். அதனால் இவ்வாறான குறைபாடுகள் அர்த்தச் சிதைவையும் வரலாற்று ரீதியிலான மொழிச் சிதைவிற்கும் வழிசமைத்துவிடும் என்பதை நாம் மனங்கொள்ளவேண்டும்.
“புள்ளிகளே பிறகு...
வடிவங்களையும் தோற்றடங்க வைக்கிறது”
‘சும்மா இருக்கிறேன்’ என்பதில் புள்ளிகள் - எழுவாய் (பன்மை) ஆதலால் தோற்றடங்க வைக்கிறது என பயனிலை வரமுடியாது. அது பன்மையாகி தோற்றடங்க வைக்கின்றன என்றே வரவேண்டும். இவ்வாறான தவறுகள் 14, 27, 33, 62, 77 ஆகிய பக்கங்களிலுள்ள கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. நிறுத்தற்குறிகளின் பயன்பாடு கவிதையின் வாசிப்பை, பலதளங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது என்பது யாவரும் அறிந்ததே. சில கவிதைகளில் அதனைச் சரிவரப் பயன்படுத்திய அஜந்தகுமார் பல கவிதைகளில் அதனைத் தவறவிட்டுள்ளார். உதாரணமாக ‘ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீர்’ எனும் கவிதையில்
“நாம் எல்லோரும் அந்த ஈக்களைக்
பிடித்துக் கசக்கி
தேநீருள் போட்டு:
நுள்ளான் சாப்பிட்டால்
நூற்றாண்டு வாழலாம் என்பது போல்
குடிப்போம்!” என்றுள்ளது.
இதில் தேநீருள் போட்டு என்பதில் ‘கம’வும் “நுள்ளான் சாப்பிட்டால் நூற்றாண்டு வாழலாம்” எனும் பழமொழி மேற்கோள் குறிக்குள்ளும் வரும்போது கவிதை சிறப்பாகிறது. அத்தோடு “ஈக்களைக் பிடித்து” என வந்துள்ளது. இது ஈக்களைப் பிடித்து என வரவேண்டும். இவ்வாறான பிழைகள் அச்சுப் பிழைகளாகவும் இருக்கக்கூடும். தேவையற்ற இடங்களில் பேச்சுவழக்குச் சொற்களைக் கையாண்டுள்ளமை கவிதையின் செறிவைக் குறைக்கிறது. இதற்கு உதாரணங்களாக அமத்தி (சிறகிலா வாழ்வில் செல்லல்) மொத்தி மகிழலாம் (ஒளிப்பிழம்பை வினாவுதல்) என்பவற்றைக் கூறலாம். இவ்வாறே தேவையற்ற சொற்கள், சொற்றொடர்கள் தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன. அவை நல்ல கவிதைகளைக் கூட சாதாரண கவிதைகள் ஆக்கிவிடுகின்றன. ‘ஒரு சோம்பேறியின் கடல்’ எனும் கவிதையின் இறுதியில் வரும் ‘நீ என் நெஞ்சுமயில் எண்ணுகிறாய்’ எனும் வரி, கவிதைக்குரிய வாசிப்பை ஒற்றைத் தன்மையாக்கி விடுவது இதற்கு நல்ல உதாரணமாகும்.
அஜந்தகுமாரின் வாசிப்பு அவரின் கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. பல கவிஞர்களின் கவித்துவத் தாக்கம் அவருடைய கவிதைகளின் வரிகளாக வெளிப்பட்டுள்ளன. உதாரணமாக உயிர் தடவுகிறாய் (ஒரு சோம்பேறியின் கடல்) என்ற வரி அ. யேசுராசாவின் ‘சுழல்’ (அறியப்படாதவர்கள் நினைவாக - தொகுப்பு) எனும் கவிதையில் “என் நெஞ்சினைத் தடவுகிறாய்” என இடம்பெற்றுள்ளது. “நீயெனக்கு இல்லையென்றான இரவு” எனும் கவிதைத் தலைப்பு அ. யேசுராசாவின் பனிமலையில் “வெற்று இரவு” எனும் (மொழிபெயர்ப்பு) கவிதையில் “நீ இல்லாமற்போன அந்த வெற்று இரவுக்குள்” என உள்ளமையையும் குறிப்பிடலாம். இவை ஆரம்ப நிலை கவிஞனிடம் கவிர்க்கமுடியாத அம்சங்களே.
இத்தொகுப்பின் நீண்ட முன்னுரை, விரவிக்கிடக்கும் தனிமனித புலம்பல்கள், வீறாப்புக்கள், வெற்றுச் சொற்கள் என்பன வாசகனுக்குச் சலிப்பைத் தருகின்றன. ஆயினும் வடிவ நேர்த்தி, ஆங்காங்கே காணப்படும் கவித்துவ வரிகள் ஆறுதல் தருகின்றன. அஜந்தகுமார் கூறுவதுபோல கவிதை இன்னும் அவர் வசப்படவில்லைத்தான். ஆயினும் வசப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. அஜந்தகுமார் தொடர்ந்து முயன்றால் கவிதை அவருக்கு வசப்படும்.
Post a Comment