த. அஜந்தகுமார்


----தேவமுகுந்தன்
பதினோராம் ஆண்டில் கல்வி கற்றபோது அக்காலத்தில் வெளிவரத்தொடங்கிய “திசை” அறிமுகமாயிற்று. வழமையான பத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்பவற்றில் வெளியான இலக்கியப் படைப்புகளை விட திசையில் வெளியான ஆக்கங்கள் வித்தியாசமான அனுபவங்களை ஊட்டின. சிறுகதை, கவிதை,விமர்சனம், பத்தி, சினிமா எனப் பல துறைகளில் ஈடுபாடுடைய மு.பொன்னம்பலம், அ.யேசுராசா என்போர் திசையின் ஆசிரியர் குழுவில் இருந்தமையே இவ்வித்தியாசத்திற்கு காரணமென பிற்காலத்தில் உணர்ந்தேன். இச்சிறப்புமிக்க ‘திசை’ குறுகிய காலத்தில் தனது ஆயுளை முடித்துக்கொண்டமை இலக்கிய உலகுக்கு துரதிர்ஸ்டமே.
சிறந்த சிறுகதைக்கு உதாரணமாக பேராசிரியர் கா.சிவத்தம்பியினால் விதந்துரைக்கப்படும் ‘கோசலை’ முதலில் அலையில் வெளியாகியிருந்தாலும் சிறுசஞ்சிகைச்சூழலில் பரிச்சயமற்றிருந்த சாதாரண வாசகர்கள் திசையின் மூலமே அக்கதையை வாசிக்கக் கூடியதாயிருந்தது.
ரஞ்சகுமாரின் ‘கோளறுபதிகம்’, மு.தளையசிங்கத்தின் ‘இரத்தம்’, சாந்தனின் ‘கிருஸ்ணன் தூது’நந்தியி;ன் ‘கேள்விகள் உருவாகின்றன’ போன்ற சிறந்த சிறுகதைகள் என விமர்சகர்களால் போற்றப்படும் சிறுகதைகள் புதிதாகவோ, மறுபிரசுரமாகவோ திசையில் பிரசுரமாயின.
ஏறத்தாழ இருபது வருடங்களின் பின் இக்கதைகளைப்பற்றிய மதிப்பீட்டை த.அஜந்தகுமார் எழுதிய ‘தனித்துத் தெரியும் திசை’ எனும் நூலின் வாயிலாக வாசிக்கும் போது, பழைய நினைவுகள் மனதில் எழுகின்றன. வடக்கு கிழக்கெங்கும் இந்திய ‘அமைதிப்படை’யின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டம், தமிழ் தேசிய இராணுவத்திற்கு ஆட்களைத் திரட்டவென இளைஞர்களை வலுக்கட்டாயமாக வான்களில் ஏற்றிய காலகட்டம், பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்த காலம். இக்காலகட்டத்திலேயே யாழ்ப்பாணத்தில் இருந்து திசை வெளியானது.
தனது பல்கலைக்கழக கலைமாணி ஆய்வுக்காக சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையை த.அஜந்தகுமார் நூலாக்கியுள்ளார். இந்நூலினைப் படிக்கும் போது, இவர் இந்நூலிற்காக பட்ட பிரயத்தனத்தை உணரமுடிகிறது. இந்நூலினுள்,
1. ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள்
2. திசை இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு
3. திசை சிறுகதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும்
4. மதிப்பீடு
என நான்கு அத்தியாயங்கள் காணப்படுகின்றன.
முதலாம் அத்தியாயத்தில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகள் எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளனவென பொருத்தமான ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.
ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகை என்னும் உபதலைப்பில் உதயதாரகை, ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சஞ்சீவி, முரசொலி, திசை, சரிநிகர், தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் ஆகிய பத்திரிகைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனவென விளக்கப்பட்டுள்ளது. 1998 இல் இருந்து வெளியாகும் தினக்குரல் என அஜந்தகுமார் குறிப்பிடுவது தவறாகும். உண்மையில் தினக்குரல் 1997 இல் இருந்து வெளியாகிறது. இந்நூலுக்கு அடுத்த பதிப்பு வெளியாகுமெனின் இச் சிறுதவறு சீர் செய்யப்படுதல் வேண்டும்.
ஈழத்தில் பிரதேச பத்திரிகைகளின் தோற்றம், திசை வெளியான சூழல், திசையின் நோக்கம், திசையின் உள்ளடக்கம் என்பவற்றை திசை இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு என்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன.
கலைச்சாரல், தூவானம், இளவட்டம், கவிதைகள், மொழிபெயர்ப்புக்கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், போன்ற அம்சங்கள் திசையின் கலை இலக்கியப்பங்களிப்பாக அமைந்தன. இவற்றை அஜந்தகுமார் உதாரணங்களின் மூலம் விளக்குகிறார்.
‘திசை’ சிறுகதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும் என்ற அத்தியாயத்தில் ‘திசை’யில் வெளியான சிறுகதைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளன. இனப்பிரச்சினை தொடர்பாக திசையில் வளியான சிறுகதைகளை இராணுவச் சூழல், போர்க்காலச்சூழலும் பெண்ணும,; போர்ச்சூழலும் சிறுவர்களும், இயக்க உருவாக்கமும் முரண்பாடுகளும், இனப்பிரச்சினையும் மனிதநேயமும், போரும் இசைவாக்கமும், புலம்பெயர்வு சாதகம் -பாதகம் எனப் பகுத்து அவற்றை விளக்குகிறார்.
‘சமுதாயப்பிரச்சினை’ என்னும் தலைப்பின் கீழ் ‘திசை’யில் வெளியான சிறுகதைகளை ஆண் -பெண் உறவுச் சிக்கல்கள், சமூகமும் பெண்ணும், சமய விமர்சனம், சாதி, வேலைத்தளப்பிரச்சினைகள், நகரவாழ்வு –அந்நியம் -நெருக்கீடுகள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு இவ் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.
‘திசை’ வெளியான காலகட்டத்தில் ஈழத்தில் வெளியான ஏனைய பத்திரிகைகள் பிரசுரித்த சில சிறுகதைகளை உதாரணமாய் காட்டி அவற்றிலிருந்து திசையின் கதைகள் எவ்வாறு உயர்ந்து நிற்கின்றனவென விளக்கப்படுகின்றது.
இறுதி அத்தியாயத்தில் ‘திசை’ சிறுகதைகள் பற்றிய மதிப்பீடு முன் வைக்கப்படுகின்றது. ஒன்றரை வருடகாலம் வெளிவந்து தனது 69 இதழ்களில் 46 சிறுகதைகளைப் பிரசுரித்த திசையானது 20 இற்கும் மேற்பட்ட மிகத்தரமான கலாப+ர்வமான சிறுகதைகளைப் பிரசுரித்ததன் மூலம் தனது காத்திரமான தன்மையினால் உயர்ந்தும் தனித்தும் நிற்பதாக ‘திசை’ பற்றிய தனது மதிப்பீட்டை அஜந்தகுமார் முன்வைக்கிறார்.
இந்நூலின் பின்னிணைப்பாக திசையில் வெளியான சிறுகதைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், மல்லிகை சிறுகதைகள்….. போல் மிசை சிறுகதைகளும் தொகுக்கப்படல் வேண்டும். அவ்வாறு தொகுக்கும் போது திசையில் வெளியான சிறுகதைகளில் எவற்றைத் தவிர்ப்பது எவற்றைச் சேர்ப்பது என்ற குழப்பம் தொகுப்பாளருக்கு ஏற்படாது ஏனெனில் இக்கதைகள் யாவுமே தரத்தில் ஒன்றையொன்று விஞசி நிற்கின்றன.
‘திசை’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவரும் சஞ்சிகையாளர், சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி, சினிமா எனப் பல்பரிமாணங் கொண்டவருமான அ.யேசுராசா குறிப்பிடுவது போல் அஜந்தகுமாரின் இந்நூல் புதியவர்களிடையே ‘திசை’யின் முக்கியத்துவத்தை கொண்டு செல்வதுடன் பழையவர்களின் நினைவுகளைக் கிளரச் செய்கிறது.
வெறுமனே பல்கலைக்கழக ஆய்வுக்காக எழுதாமல் ‘சீரியசாக’ இந்நூலினை எழுதி வெளியிட்ட த. அஜந்தகுமாரை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.




0 Responses

Post a Comment