த. அஜந்தகுமார்

வலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள்
தங்கள் பாதைகளில்
வலிகளை
வழித்துணை ஆக்கினர்
கண்களில் கசிந்த நீரினை
வியர்வையில்
மறைய வைத்தனர்
முதுகில் சுமையும்
நெஞ்சில் சுமையும்
நிர்ந்தரியாய் இருப்பதை மறந்தனர்
விசாரிப்புகளில்
மற்றவர்கள்
சொல்லும் போதே
தங்கள் வலிகள்
நினைவுக்கு வந்து அழுதனர்

ஓலமிட்டழுத கதைகள்
ஒதுங்கிக் கிடந்தன
ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது
ஈரத்தில் தலைசாய்க்கிறார்கள்
கண்கள் மூடப்பட்டு இருக்கிறது
ஈரம் எப்பொழுதும் நினைவுபடுத்து்ம்
உணர்வுகள் இடையே 
துாக்கமும் சாத்தியமாகவே செய்கிறது
கனவுகள் தேவையற்றதாகிவிட்டன
குப்பைகளுடன் கனவுகளும் இருக்கட்டும்
பூனை விராண்டிக் கொண்டிருப்பது போல்
ஏதேதோ நடக்கிறதுதான்
ஆனால் எல்லாமே 
நடக்கவே செய்கிறது

வலிகளுடன் வாழ்பவனை நீ விசாரியாதே
புண்ணை மூடும் தோலினை
சுரண்டிப் பார்க்காதே
கண்ணீர்க் கதைகளை கேட்டு
கண்ணீரில் ஏன் கதைகளை எழுத வைக்கிறாய்
விட்டு விடு

விசாரிக்கப்படாமலே
வலிகள் இருக்கட்டும்

வைரத்துடன் 
நாளை அவர்கள் வருவார்கள்

வைரம் அவர்களின் அழகைப் பேசும்
வெற்றியின் கதையை
அவர்கள் அப்போது பேசட்டும்

த. அஜந்தகுமார்
வலியின் வளத்தால் நிமிரும் கூர்மைகள்
அஜந்தகுமாரின் கவிதைகள் ஒரு பார்வை

------------------------------------------------------------
பேராசிரியர் க.பஞ்சாங்கம்(தமிழ்நாடு)

    தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு ம.இராசேந்திரன் அவர்களின் கடைசி நேர அழைப்பை ஏற்று செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டேன். தங்கியிருந்த விடுதியில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் சென்னை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி அமைப்பாளர் நண்பர்.அதியமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பேச்சின் ஊடே வேங்கடாசலபதி என்ற பெயரை நான் உச்சரித்ததை என் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தவர் காதும் உள்வாங்கியிருக்கிறது. என் தொலைபேசி உரையாடல் எப்போது முடியும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தவர் போல பக்கத்தில் இருந்த அந்த நண்பர் “ஐயா! நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறேன்; தாங்கள் யார் என்று அறியலாமா! சலபதியை உங்களுக்குத் தெரியுமா!” என்று கண்ணில் ஆசை ததும்ப மொழியாடினார். என் பெயரைச் சொன்னவுடன் “ஐயா! நீங்களா! உங்களைத் தான் பாக்கணும்; உங்கள் எழுத்துக்களையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்திருக்கேன்! உங்களுக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டமே அங்க இருக்கு! உங்களைச் சந்தித்ததிலே எனக்கு ரொம்ப ஆனந்தம்;” இப்படிப் பொருள்படும் யாழ்ப்பாணத் தமிழில் பரபரப்புடன் பேசினார். இளைஞராக இருந்தார்; அஜந்தகுமார் என்கிற இந்தக் கவிஞர் இப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார். உண்டு முடித்தவுடன் பேசிக் கொண்டே எனது அறைக்கும் வந்துவிட்டார்; இரவு பதினொரு மணி வரைக்கும் பேசிக் கொண்டிருந்தோம்; தமிழ்நாட்டில் இந்த இளம்வயதில் இந்த அளவிற்கு விவரமான, ஆழமான ஓர் இலக்கிய ஆசிரியரைக் காண்பது அரிது என என்னைச் சொல்ல வைத்தார். ‘சிறுபான்மையினர்’ என்கிற உண்மை, வலியையும் துன்ப துயரங்களையும் கூடவே வைத்திருப்பது போல அறிவுவளத்தையும் கூர்மையான நுண்ணுர்வையும் அதிகமாகவே வழங்கிவிடும் போலும் என்றும் என்னை எண்ண வைத்தார். அப்படியே தூங்கிப் போனேன்;  காலையில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது; ‘ஒரு சோம்பேறியின் கடல்’; என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பை மிகுந்த தயக்கத்துடன் வழங்கினார்.

    பொதுவாகக் கவிதை தனது அகத்திற்குள், பழைமைகளுக்குள், ஆசைகளுக்குள், கனவுகளுக்குள், இயலாமைகளுக்குள், குற்ற உணர்வுகளுக்குள், தோல்விகளுக்குள், இழப்புகளுக்குள், பிழைகளுக்குள், கவலைகளுக்குள், புண்களுக்குள் தன்னைப் பயணிக்க நிர்ப்பந்திப்பது; நாவல் போன்ற மற்ற இலக்கிய வடிவங்கள், புறம் சார்ந்தவை; தனக்கு வெளியே சிறகை விரிக்க வேண்டுபவை; இந்தச் சூட்சுமம் அஜந்தகுமாருக்கு இந்த இளம் வயதிலேயே தெரிய வந்ததும் அதன்படிச் சரியாகவே வினைபுரிய முடிந்ததும்தான் ஆச்சிரியப்படத்தக்கவை. ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பில் தன்னைத்தான் தட்டிக் கொடுத்துக் கொள்கிறான்; தன்னைத்தான் தோண்டி தோண்டி அகழ்வாராய்ச்சி செய்து புருவங்களை உயர்த்தும் படிமங்களையும், பாசிகளையும் கண்டெடுத்து மொழிப்படுத்துகிறான். தன் இருப்போடு அவன் நிகழ்த்துகிற சமர்தான் அவன் கவிதையாக வெளிப்படுகிறது. பேரினவாதம் அதன் கொடூரமான உச்சக்கட்ட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற இருட்சூழலில், எங்கும் அச்சமும் பீதியும் அலறலும் ஓலமும் மரணத்தின் நெடியும் சூழ்ந்திருக்கிற ஒரு நெருக்கடியில், தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வு குறித்தும், தன் இயலாமை குறித்தும், கையறுநிலை குறித்தும், குற்ற உணர்வினால் குமையும் ஒரு ஆன்மாவின் அர்த்தம் செரிந்த சுய விமர்சனமே இங்கே ‘ஒரு சோம்பேறியின் கடலாக’ நம்முன் விரித்துக் காட்டப்படுகிறது.

    கத்திக் கொண்டிருக்கும் ப+னையாய் (ப.16) அந்தக் குற்ற உணர்வு நடுச்சாமத் தூக்கத்தையும் கலைக்கிறது. வாழ்தலின் அச்சம் தலையணையைத் தூக்கி எறிந்து அந்தப் ப+னையை விரட்ட முயல்கிறது. ஆனாலும் ப+னையின் சத்தத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்தச் சத்தத்திற்காகத் தூங்காமலும் இருந்துவிட முடியவில்லை. கவிஞர் எழுதுகிறார்:

            செல்லடியே தாலாட்டாய்
            மாற்றங் கண்ட புத்திரனல்லவா?
            நான் தூங்கிப்போனேன் (ப.17)

எத்தனை இரவுகளில்பட்ட வேதனையின் பிரசவ வெளிப்பாடு இந்த வார்த்தைக் கோலங்கள்.

    இருப்பைக் குறித்த இந்தச் சுய விமர்சனம், ஏதாவது ஒரு கிளையில் தன்னிலையைச் (ளுரடிதநஉவ) செலுத்த முயல்கிற அதே கணத்தில் எது நிஜம், எது நிழல் என்கிற அடுத்தக்கட்ட பிரச்சினை ப+தாகரமாக வடிவெடுத்து முன்னிற்கின்றது. இந்நிலையில் நிஜத்திலிருந்து விலகி மாயையில் சிக்கிக் கொள்வோமோ என்கிற அச்சம் தன்னிலையைத் தின்னத் தொடங்கி விடுகின்றது. இப்படித் தின்னக் கொடுத்த நிலையில்தான் இப்படி ஒரு கவிதை உருவெடுக்கிறது.

            எதிலுமோர் நிழலின் தோற்றம்
            தவிர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது
            நிழலுக்கும் நிஜத்துக்குமான
            இடைவெளிச் சுருக்கம்
            ஏதோவொரு மாயையைச் சிருஷ்டித்து
            உண்மையைப் பதுக்கிவைத்திருக்கிறது (ப.3)

    இப்படி நிஜத்தின் பக்கம் நெருங்க முடியாத சூழலில் தன்னிலை இருளில் கிடந்து இவ்வாறு தவியாய்த் தவிக்க நேர்கிறது.


            என் காலங்கள் எல்லாவற்றிலும்
            இருளின் பற்கள் கோரமாய் முளைக்கின்றன
            நானே எனக்குக் கனத்து நசிந்தபடி
            இருளின் பற்களிடை
            சப்பப்படுகிறேன்

            ஜாதகப் புத்தகத்தின்
            பழுத்த தாள்களிடை
            இறந்து போய்
            ஒட்டிக் கிடக்கும் ப+ச்சியாய்
            இந்த வாழ்வோடு
            ஏதோ ஒட்டிக் கிடந்தபடி
            என் வாழ்வு,
            என் கண்களிடை மங்கலாய்த் தெரிகிறது (பக் 74-75)

இவ்வாறு ‘வலியின் வளத்தால் நிமிரும்’ குணங்களின் கூர்மைகளாய் வார்த்தை வடிவமெடுக்கும் இந்தக் கவிதைகள் பள்ளி, வீடு, பாசிபடிதல், காயம், மழை, வெயில், சிற்பம், உயிர், நான், அவள், ஒளிப்பிழம்பு, புன்னகைகளின் விசங்கள், ஈக்கள் கலந்த தேநீர்க் கோப்பை, கடல், நிர்வாணத் தெரு, வண்ணத்துப் ப+ச்சி, அச்சக்கோடுகள், கனவு, கானல், காதல் முதலிய படிமக் குறிகள் மூலம் கவித்துவ உருவாக்கம்  என்கின்ற கடும் வினையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன. பொதுவாகக் கவிதையில் பயன்படுத்தப்படும் வார்த்தை ஒவ்வொன்றும் நேரடியான அகராதிப் பொருள் கொண்டவை அல்ல் ஒற்றைப் பொருளை நோக்கியவையும் அல்ல் பன்முகப்பட்ட பொருளையும், தொனியையும் தனக்குள் கொண்டவை. பல்வேறு அர்த்த அடுக்குகளை உற்பத்தி செய்து கொள்வதற்குத் தோதுவாகத் தம்மைச் சமைத்துக் கொண்டவை; இத்தகையக் கவிதை மொழியை அஜந்தகுமார் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதன் மூலம் தன் உணர்வுகளை நேரடியாக வெறும் உணர்வுகளாக வெளிப்படுத்தாமல் அனுபவமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. “மொழிக்குள் எந்தளவிற்கு மறைந்து கொள்கிறோமோ அந்தளவிற்கு அதிகமாக வெளிப்படுவோம்” என்பது கவிதையாக்கத்தின் அறம். அந்த அறத்தை அஜந்தகுமார் அற்புதமாக வளைத்துப் பிடித்துள்ளார். கவிதையாக்கத்தின் இந்தத் தந்திரத்தை அறியாதவர்கள்தான் நேரடியான அரசியல் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இல்லையே என்று முன்னுரையில் கவிஞர் சுட்டிக்காட்டுவது போலக் குறைபட்டுக் கொள்ளலாம். இது கவிஞரின் குறையல்ல் கவிதை குறித்த அவர்களின் புரிதல் குறைதான். போர்ச் சூழலில் வாழச் சபிக்கப்பட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனின் இதயத்துடிப்புகளின் ஓசையாக நான் இந்தக் கவிதைகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். கவிதை வாசகனுக்குள் சத்தத்தை எழுப்பக் கூடாது; மௌனங்களை உற்பத்தி பண்ண வேண்டும்.

            நட்சத்திரங்களால் வானம்
            சிதறிக் கிடக்கிறது (ப.51)

            சுவரும் நானும்
            பார்வைகள் சப்பிச் சலிக்கிறோம் (ப.62)
            நான் கருகும் வாசம்
            என்னையே ஒங்காளிக்க வைக்கிறது (ப.66)

            எல்லோரிடமும் ப+த்துக் குலுங்கும் புன்னகை
            என்முகம் கண்டதும்
            ஓடிக் கொள்கிறது
            புன்னகை கொல்லும் பாவம்
            புதைகிறது என்னுள் (ப.54)

            சொற்களின் கவலை
            நாளெல்லாம்
            உன் முகத்தில்
            எழுதப்பட்டு கிடக்கட்டும்! (ப.24)

அஜந்தகுமாரின் இத்தகைய வரிகளை வாசிக்கிற யாரும் “பிரபஞ்ச வெளியில் நிறைந்து கிடக்கும் அவருடைய கவலைகள்” மூலம் தங்களுடைய கவலைகளைக் கண்டு மௌனம் காப்பதும் அதன்மூலம் தன்னைத் திரட்டிக் கொள்வதும் தவிர்க்க முடியாத வினையாகத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. தம் முன்னுரையில் அஜந்தகுமார் இவ்வாறு எழுதுகிறார்:

    சொற்களின் மீதான பித்தும் பிரியமும் பெருகியபடியே இருக்கிறது.
    சொற்கள் ஒரு பாற்கடலாய் என் முன் விரிந்து அலையெறிந்தபடியே
    இருக்கின்றன. என் அனுபவ உடலோடு அதில் இறங்குகையில் இனம்
    புரியாப் பரவசம் என்னை ஆட்கொள்கிறது… நானும் என்
    அனுபவங்களும் சொற்களோடு போராடித் தோற்றபடியே திரும்ப
    வேண்டியிருக்கிறது.

அன்புள்ள அஜந்தகுமார்! தோற்கிறோம் என்கிற உங்களின் இந்த விழிப்புணர்வுதான், உங்கள் கவிதைக்கான ஆதார சக்தி. தோல்வியிலிருந்துதான் எல்லாப் படைப்புகளும் உற்பத்தியாகின்றன. உங்களுக்குள் தோல்வி இருக்கிறது; எனவே கவிதை இருக்கிறது. உங்கள் பணி தொடரட்டும்.

காசி இல்லம்                                                        பெருகும் அன்புடன்  க. பஞ்சாங்கம்


புதுச்சேரி-8
14.09.2010

                                                                                         
                                       நன்றி - ஜீவநதி நவம்பர் 2010
த. அஜந்தகுமார்



--- தி. செல்வமனோகரன்



“ஒரு கவிதை இருக்கவேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம்போல மௌனமாய்
பேச்சற்று
புராதன பதக்கங்கள் கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்
பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மௌனமாய்
ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல்
..............................
ஒரு கவிதை காலத்தினுள் சலனமற்று இருக்கவேண்டும்
நிலா உயர்வதைப் போல
...............................
ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது
கவிதையாக இருக்க வேண்டும்”
(கவிதைக்கலை - ஆர்க்கிபால்ட் மேக்லிஷ்)

ஒவ்வொரு மொழியினதும் தனித்துவமானதும் செப்பமானதுமான வடிவம் கவிதை. பொதுவில் கவிதைகள் சொற்களைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் வெறும் சொற்கள் கவிதையாகிவிடா. கவிதை, சொற்கள் - வரிகள் - அவற்றிற்கிடையிலான பெரு மௌனம் என்பவற்றால் உருவாவது. மௌனமே அதன் பேரம்சம். சொற்களும் - வரிகளும் தமக்கு இடையில் தம் கூர்மையை இழக்காது பயணிக்கும் இடையறாத உறவே அவற்றிற்கிடையிலான வலிதான மௌனமே அக்கவிதைக்கு ஆழத்தையும் தனித்துவமான சிறப்பையும் அளிக்கவல்லதாகிறது. வார்த்தைகள் அர்த்தமிழந்துவிட அவற்றிற்கு இடையில் வரும் மௌனவெளி வளர்ந்து பூதாகரமான விருட்சமாகி நிற்கும். காலத்தின் சிதைந்த வெளிகளில் படைப்பாளி தன்னையும் தன் பிரபஞ்சத்தையும் மீட்டுக் கொள்வதோடு மீள்கட்டமைத்துக் கொள்வதுமாக அமையும். “மௌனத்தின் முகத்தில் வீசப்பட்ட ஒரு பேச்சே வாழ்க்கை” என்பார் ஜோசப் ப்ராட்ஸ்கி. அவ் வாழ்க்கைச் சுழல் ஓட்டத்துள் அகப்பட்ட படைப்பாளிக்கு தானாகக் கிடைப்பது அல்லது தரப்படுவதே கவிதை. அவன் வாழ்க்கையை அது தரும் அனுபவத்தை தன் பிரபஞ்ச வெளிக்குள்ளும் அப்பாலும் பிரக்ஞைபூர்வமாக சொற்களால் கட்டமைத்து நிற்கின்றான். இக் கட்டமைத்தல் சொற்களின் அர்த்தங்களையும் காலத்தையும் உடைத்தெறிந்து பிரவாகித்து நிற்கும்போதே அது கவிதையாகிறது.

அஜந்தகுமார், வளர்ந்துவரும் இளம் படைப்பாளி. ‘ஒரு சோம்பேறியின் கடல்’ எனும் நூல் அவரின் முதற் கவிதைத் தொகுப்பாகும். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவி விரிவுரையாளரான அஜந்தகுமார் இரண்டாயிரமாண்டிலிருந்து கவிதை எழுதி இருந்தாலும் 2004 - 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எழுதிய முப்பத்தெட்டுக் கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அம்பலக் குழுமத்தால் வெளியிடப்பட்ட இந்நூலின் வித்தியாசமான, அழகான அட்டைப்படத்தினை பா. அகிலன் வடிவமைத்துள்ளார். (அட்டைப் படம் பற்றிய விபரம் இல்லை)

இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தனிமனித பிரக்ஞைக்கு அழுத்தம் கொடுத்து நிற்கின்றன. காதல், மன அவசங்கள், சுய மதிப்பீடு, போர், வாழ்வியல், நம்பிக்கையீனங்கள், நம்பிக்கைகள் எனப் பல தளங்களில் இவரின் கவிதைகள் விரிய முற்பட்டுள்ளன. தாயன்பின் முன்னால் ஒரு மகனின் ஆசைகள் சிதைந்து போவதை அதனால் ஏற்படும் மன அவசத்தை
“அம்மா ஒவ்வொரு நாளும்
தன் கனவுகளை
கண்ணீரில் தோய்த்தெடுத்து
கைகளிலே தருகின்றாள்
பாசம் முன்வந்து
மோதி நிற்கின்றது
எல்லாச் சிறகுகளையும்
என் கைகளாலேயே
ஒடித்துப் போடுகிறேன்”
(சிறகிலா வாழ்வில் செல்லல்)
என அழகுற வெளிப்படுத்தி நிற்கின்றது. ‘ஒளிப்பிழம்பை வினாவுதல்’ எனும் கவிதை, துன்பம் துன்பத்தைப் பொறுமையோடு கடக்க முற்படல், இயலாமை, அதனால் வரும் கோபம் - துக்கம் எனப் பல்வேறு பிரக்ஞைகளைக் கலந்து தருகிறது.

“நான்
மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கிக் கதறியழ
நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு!
நெற்றிக் கண்ணில் இருந்து
பிள்ளைகளை உற்பவி!
என வரும் வரிகள் சமூக யதார்த்தமாகவும் கன்னத்தில் அறையும் உண்மையாகவும் உள்ளன.

ஈழத் தமிழர்களின் வாழ்விலும் படைப்புக்களிலும் அதிக இடத்தைப் பிடித்துவிட்டவை போர் தந்த ரணங்கள். அவை மாறாத - மறையாத ஒன்றாய்க் கலந்து கிடக்கின்றன. ஒவ்வொரு ஈழத்தமிழனது வாழ்வும் கேள்விக்குறியாகி மரண விளிம்பில் நின்று அவன் பட்ட அவஸ்தையை,
“எனது இரகசியங்களின்
திசைவழிப் பயணங்களை
பிசைந்தபடி செல்கின்றது
இருளின் கரம்!”
(ஞாபகங்களின் அச்சக்கோடுகள்)

“செல்லடியே தாலாட்டாய்
மாற்றங்கண்ட புத்திரனல்லவா!”

எனும் வரிகளால் அஜந்தகுமார் புலப்படுத்துகின்றார். வாழ்வியல் யதார்த்தத்தை ‘நிலைத்தலின் பாங்கு’ எனும் கவிதையில் ஒன்றின் வீழ்ச்சி மற்றொன்றின் எழுச்சி என்பதை
“அவன் விழிகளின் உயிர்ப்போடு
சிற்பமும் மிளிர்ந்து நிமிர்ந்தது
சிற்பி செத்திருந்தான்
சிற்பம் உயிர்த்திருந்தது!”
என்பதனூடாக உணர்த்த முற்பட்டுள்ளார்.

கனவுகளோடு புறப்படும் இளைய தலைமுறை சமூக வாழ்க்கையில் முட்டிமோதி துயரங்களை மட்டுமே பதிலீடாகப் பெறும்போது தன்மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கையீனம் கொண்டுவிடுகிறது. தவறான முடிவுகளை நோக்கி நகரத் தொடங்குகிறது.

“துயரின் நிலைத்த வாழ்வில்
பெயர்ந்திடா அதன்
தன்மையின் பலத்தில்
பின்னடைந்து போய்
அழுகிறது கண்!”
(பாசி படிதல்)
மேற் சொன்ன வரிகள் நம்பிக்கையீனத்தின் சான்றாக அமைகின்றன. ஆயினும் அதனின்றும் மீண்டெழும் வேணவாவும் இவரின் கவிதைகளில் உள்ளன. உதாரணமாக
“காத்திருத்தல்
கானலென்ற உண்மையைக்
கணங்கள் ஒவ்வொன்றும்
கதைகதையாய்ச் சொன்னாலும்
நம்பிக்கை மட்டும்
சிதையாது தேங்கிற்று”
(நீண்ட காத்திருப்பு)
எனும் வரிகளைச் சுட்டலாம். இவ்வாறு வாழ்வியல் பேரவலத்தால் சிக்குண்டு தவிக்கும் படைப்பாளி தன்னைத் தான் சுயமதிப்பீடும் செய்துகொள்கிறார். தனது சின்ன வட்டத்துள் அடங்கிப்போன வாழ்வுகூட சிதைந்தழிந்து போகுமோ என்ற ஏக்கமும் அதிகம் புதிர்ப் பொழுதுகளைத் திணித்தபடியே வாழ்வு போய்க் கொண்டிருக்கிறது என்ற தெளிவும் (புதிர்ப் பொழுதுகளும் வாழ்வும்) அவரிடம் இருக்கிறது.

‘கத்திக் கொண்டிருக்கும் பூனை’, ‘ஒரு தேவதையின் ஒளிக் கவிதை’ போன்ற சில கவிதைகள் வாசகனுக்குப் பல்வகைமையான வாசிப்புக்களைத் தரவல்லனவாய் உள்ளன. பிரக்ஞைபூர்வமான படைப்பாக்கத்தில் வார்த்தைகளைக் கவிதைகள் பயன்படுத்திவிட்டு, அவற்றை நீறாக்கி விடுவதையும் கவித்துவச் செறிவு மேலோங்குவதையும் சில இடங்களில் காணமுடிகிறது.
“கோபத்தோடு உன்தெரு
காறி உமிழும் புழுதி”
(உன்னை வினாவுதல்)
“என்னைச் செரிக்கும்
வலிகளின் நிமித்தம்
சொற்கள் வரமுடியாது
மௌனம் பிசைகிறது”
(சொற்கள் பற்றிய இரண்டு கவிதைகள்)
என்பவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். ‘புள்ளியின் கிறுக்கல்’, ‘மயிர்க்கொட்டியும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘நிர்வாணத் தெருவும் கவிஞனின் வலியும்’, ‘ஆர்ப்பரிக்கும் என் கடல்’ போன்ற இன்னும் சிலவும் தமது இலக்கினை ஓரளவேனும் தொட்ட கவிதைகள் எனலாம். ‘மறந்து போனேனா’, ‘சொல்லலங்காரம் மிகுந்த உன் தவறும் என் சக்தியும்’ போன்ற கவிதைகள் இத் தொகுப்புக்கு நலிவைத் தருகின்றன. ‘எதிர்காலம் குறித்து...’ என்னும் கவிதையின் முற்பகுதி
“வாழ்வுக்கான வேர்கள்
உன்வசமே ஊன்றியுள்ளன
புடைத்து வளரும் விருட்சம்
உன்வேரில் இருந்து விடுபடின்
வாட்டம் கண்டு வீழும் என்பதை
நீயறிவாயோ....”
என அமைந்துள்ளது. “வாழ்வுக்கான வேர் உன்வசமே ஊன்றியுள்ளன” எனும் வரி தன்னை விருட்சமாகவும் முன்னிலையாளரைத் தன்வேர் பற்றி நிற்கும் மண்ணாகவும் சித்திரிக்கிறது. ஆனால் அடுத்த வரி ‘விருட்சம் உன்வேரில் இருந்து விடுபடின்’ என வருகிறது. ‘உன்னுள்ளே வளரும் வேர்கள்’ என்னும் வரியும் முன்னிலையாளரை ‘மண்’ ணாகவே சித்திரிக்கிறது. இது கருத்து முரண்பாட்டைத் தருகிறது. ‘உன் வேரில்’ எனும் சொற்றொடர் தவறாக உள்ளது. இது ‘உன்னில்’ என்றே வரவேண்டும். அதேபோல ‘மழை எழுதிய எதிர்வினை’ என ஒரு கவிதைத் தலைப்பு அமைந்துள்ளது. ஆனால் கவிதை,
“மழை குறித்த வாசிப்பு
எதிர்வினை ஒன்றை
என் தலைக்குள்
எழுதிச் சென்றது” என வருகிறது.

ஆக, மழை குறித்த “வாசிப்பே” எதிர்வினையை எழுதியது மழையல்ல. அப்படியாயின் கவிதைத் தலைப்பு “மழை குறித்த வாசிப்பு” என்றே இடம்பெற்றிருக்க வேண்டும்.

கவிதையில் தேவையின் பொருட்டோ மிக அழுத்திச் சொல்லும் பொழுதோ மீள மீள ஒரே சொற்களைக் கையாளுதல் வழமையும் பொருத்தப்பாடும்கூட. ‘வீரம் குறித்த ஒரு கேள்விக்குரல்’ எனும் கவிதையில் ஏழு இடங்களில் “என்” எனும் சொல் வந்துள்ளது. இது கவிதையின் செறிவை நொய்மைப்படுத்துகிறது. அதேபோல ஒத்ததன்மையுள்ள சொற்கள் ‘காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை’ எனும் கவிதையில் கையாளப்பட்டுள்ளன. முதல்வரி
“நீ ஒன்றும் பேசாது பறையாது
உம்மென்றபடி இருக்கின்றாய்”
என்றுள்ளது. பேசாது - பறையாது என்பன இருவேறு பொருட்களையோ உணர்வுகளையோ தரவில்லை.

கவிதை வரிகள் பல ஒருமை பன்மைப் பிழைகளைக் கொண்டமைந்துள்ளன. நல்ல கவிதையில் சொற்கள் அர்த்தம் இழந்து போய்விடும் என்பதால் இவை முக்கியமில்லை எனச் சிலர் வாதிடவும் கூடும். அதனால் இவ்வாறான குறைபாடுகள் அர்த்தச் சிதைவையும் வரலாற்று ரீதியிலான மொழிச் சிதைவிற்கும் வழிசமைத்துவிடும் என்பதை நாம் மனங்கொள்ளவேண்டும்.

“புள்ளிகளே பிறகு...
வடிவங்களையும் தோற்றடங்க வைக்கிறது”
‘சும்மா இருக்கிறேன்’ என்பதில் புள்ளிகள் - எழுவாய் (பன்மை) ஆதலால் தோற்றடங்க வைக்கிறது என பயனிலை வரமுடியாது. அது பன்மையாகி தோற்றடங்க வைக்கின்றன என்றே வரவேண்டும். இவ்வாறான தவறுகள் 14, 27, 33, 62, 77 ஆகிய பக்கங்களிலுள்ள கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. நிறுத்தற்குறிகளின் பயன்பாடு கவிதையின் வாசிப்பை, பலதளங்களுக்கு இட்டுச் செல்லக்கூடியது என்பது யாவரும் அறிந்ததே. சில கவிதைகளில் அதனைச் சரிவரப் பயன்படுத்திய அஜந்தகுமார் பல கவிதைகளில் அதனைத் தவறவிட்டுள்ளார். உதாரணமாக ‘ஈக்கள் கலந்த ஒரு கோப்பைத் தேநீர்’ எனும் கவிதையில்
“நாம் எல்லோரும் அந்த ஈக்களைக்
பிடித்துக் கசக்கி
தேநீருள் போட்டு:
நுள்ளான் சாப்பிட்டால்
நூற்றாண்டு வாழலாம் என்பது போல்
குடிப்போம்!” என்றுள்ளது.
இதில் தேநீருள் போட்டு என்பதில் ‘கம’வும் “நுள்ளான் சாப்பிட்டால் நூற்றாண்டு வாழலாம்” எனும் பழமொழி மேற்கோள் குறிக்குள்ளும் வரும்போது கவிதை சிறப்பாகிறது. அத்தோடு “ஈக்களைக் பிடித்து” என வந்துள்ளது. இது ஈக்களைப் பிடித்து என வரவேண்டும். இவ்வாறான பிழைகள் அச்சுப் பிழைகளாகவும் இருக்கக்கூடும். தேவையற்ற இடங்களில் பேச்சுவழக்குச் சொற்களைக் கையாண்டுள்ளமை கவிதையின் செறிவைக் குறைக்கிறது. இதற்கு உதாரணங்களாக அமத்தி (சிறகிலா வாழ்வில் செல்லல்) மொத்தி மகிழலாம் (ஒளிப்பிழம்பை வினாவுதல்) என்பவற்றைக் கூறலாம். இவ்வாறே தேவையற்ற சொற்கள், சொற்றொடர்கள் தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன. அவை நல்ல கவிதைகளைக் கூட சாதாரண கவிதைகள் ஆக்கிவிடுகின்றன. ‘ஒரு சோம்பேறியின் கடல்’ எனும் கவிதையின் இறுதியில் வரும் ‘நீ என் நெஞ்சுமயில் எண்ணுகிறாய்’ எனும் வரி, கவிதைக்குரிய வாசிப்பை ஒற்றைத் தன்மையாக்கி விடுவது இதற்கு நல்ல உதாரணமாகும்.

அஜந்தகுமாரின் வாசிப்பு அவரின் கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. பல கவிஞர்களின் கவித்துவத் தாக்கம் அவருடைய கவிதைகளின் வரிகளாக வெளிப்பட்டுள்ளன. உதாரணமாக உயிர் தடவுகிறாய் (ஒரு சோம்பேறியின் கடல்) என்ற வரி அ. யேசுராசாவின் ‘சுழல்’ (அறியப்படாதவர்கள் நினைவாக - தொகுப்பு) எனும் கவிதையில் “என் நெஞ்சினைத் தடவுகிறாய்” என இடம்பெற்றுள்ளது. “நீயெனக்கு இல்லையென்றான இரவு” எனும் கவிதைத் தலைப்பு அ. யேசுராசாவின் பனிமலையில் “வெற்று இரவு” எனும் (மொழிபெயர்ப்பு) கவிதையில் “நீ இல்லாமற்போன அந்த வெற்று இரவுக்குள்” என உள்ளமையையும் குறிப்பிடலாம். இவை ஆரம்ப நிலை கவிஞனிடம் கவிர்க்கமுடியாத அம்சங்களே.

இத்தொகுப்பின் நீண்ட முன்னுரை, விரவிக்கிடக்கும் தனிமனித புலம்பல்கள், வீறாப்புக்கள், வெற்றுச் சொற்கள் என்பன வாசகனுக்குச் சலிப்பைத் தருகின்றன. ஆயினும் வடிவ நேர்த்தி, ஆங்காங்கே காணப்படும் கவித்துவ வரிகள் ஆறுதல் தருகின்றன. அஜந்தகுமார் கூறுவதுபோல கவிதை இன்னும் அவர் வசப்படவில்லைத்தான். ஆயினும் வசப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. அஜந்தகுமார் தொடர்ந்து முயன்றால் கவிதை அவருக்கு வசப்படும்.


த. அஜந்தகுமார்



----ந.மயூரரூபன்


“கவிஞன் அவன் கவிதையின் தந்தை|
மொழிதான் அக்கவிதையின் தாய்” என்பது ஒரு கவிஞனின் கூற்று.

ஒரு கவிதையை அடையாளப்படுத்துவதற்கு அல்லது அதனை விளங்கிக் கொள்வதற்கென நாம் ஏற்கனனே எமக்குள் வைத்திருக்கும் சட்டகத்தினை அதன்மேல் அழுத்திப் பார்க்கிறோம். கவிதைகள் எல்லாச் சட்டகத்துக்குள்ளும் அடங்குபவையல்ல. படைப்பின் இயல்பே அதுதான்.

கவிதை என்பது ஒரு மனநிகழ்வு என்பது அநேக கவிஞர்களினதும் விமர்சகர்களினதும் பதிவு. அந்தவகையில் ஒரு கவிதை அது சொல்லும் கருத்தால் மட்டும் எங்களை கவர்ந்துவிடாது சொல்லப்படும் முறையால் தனியிடம் பெறுவது ஆகும்.

இங்கு கவிதை கொண்டிருக்கும் தளங்களை அடையாளம் காட்டுகிறார்கள்.

கவிதை சொற்களைப் படிமங்களாக ஆக்கும் கலை
கவிதையின் வாசக இடைவெளி அல்லது மௌனம் அதன் ஒவ்வொரு சொற்களுக்கு இடையேயும் உள்ளது.
கவிதை ஒவ்வொரு முறையும் மொழியின் புதிய சாத்தியப்பாடு ஒன்றை நிகழ்த்துகிறது.

இவை மொழிசார் படைப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொதிந்திருப்பவை. ஆக, கவிதையின் உயிர், அதன் மொழியின் பயன்பாட்டிலே உருக்கொள்கிறது.

ஒரு படைப்பினை புரிந்துகொள்ளல் என்பது இன்று பிரச்சினையாய் இருக்கிறது. புரியாமை படைப்பாளியின் மீது எதிருணர்வைத் தருகிறது. படைப்பை ஒதுக்குகிறது.

கவனமற்று படிக்கப்படாமல் இருக்கும் படைப்புத்தான் புரியாமல் அமையும். படிப்பதில் கடினமான உழைப்பை ஒருவரும் செலுத்துவதில்லை.

“ஒரு படைப்பு புரியவில்லை என்று ஒருவர் சொன்னால் உடனடியாக எத்தனை தடவை படித்தீர்கள் என்று கேட்பது சுந்தரராமசாமியின் வழக்கம். அநேகமாக அனைவரும் ஒருமுறை என்றுதான் சொல்வார்கள். எட்டாம் வகுப்பு கணிதத்தை ஒரு தடவை படித்து உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என்பார் சுந்தரராமசாமி. எட்டாம் வகுப்புப் பாடத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட நீங்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கவில்லை என்றுதானே பொருள் என்று கேட்பார்” (ஜெயமோகன் 2007)

உண்மையில் கலை, அதன் அடிப்படைகளை புரியும்போது தான் எம்மிடம் வருகிறது.

இலக்கியப் படைப்பினை விளங்கிக்கொள்ள மொழியின் சாத்தியப்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும். ஜெயமோகன் சொல்வது போல படைப்பு மொழி என்பது அதற்கான தொல்படிமம், பொதுப் படிமம், அந்தரங்கப் படிமம் என்பவற்றை இணைத்ததாயே காணப்படுகிறது.

எங்களது அகமனம் வாசிப்புடன் இணைகிறபோது அது ஒரு பயிற்சியாக, சொற்கள்{ படிமங்கள் தொடர்பான ஒரு விழிப்பாக அமையும்.

ஒரு படைப்பாளியிடம்{ கவிஞனிடம் ஏற்படும் அகத் தூண்டலுடன் தற்செயல் தன்மை சேரும்போது படைப்பு உருவாகிறது எனச் சொல்வார்கள். அஜந்தகுமாரிடமும் இந்த அகத்தூண்டலும் தற்செயல்களும் அநேக கவிதைகளில் உள்ளன. ‘சுவரில் போகும் பல்லி’ ‘கத்திக் கொண்டிருக்கும் பூனை’ என அகத்தூண்டலும் தற்செயல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

படைப்பாளிகளுக்கு அந்தரங்கமான படிமங்கள் இருப்பதுண்டு. பசுவய்யாவின் கவிதைகளில் கடல் மீண்டும் மீண்டும் வருகின்ற படிமமாக இருக்கின்றது. அஜந்தகுமாரின் கவிதைகளில் அந்தரங்க படிமங்களை மேலெழுந்தவாரியாக இனங்காண முடியவில்லை. ‘கடல்’ வண்ணத்துப்பூச்சி, பூனை அனைத்தும் பொதுப்படிமமாயே இங்கு வாசிக்கப்படலாம். அஜந்தகுமாரின் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவான அவரின் அந்தரங்கமான படிமத்தை சொற்களாயின்றி உணர்வுகளாயே அடையாளங் காணமுடிகிறது. எதிலும் துயரத்தின் சாயைiளே படிந்திருக்கின்றன.

அதேபோல் படைப்பாளிகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற தொல்படிமங்களும் வாசிப்பு வெளிகளை விரிக்கின்றன. மரபு ரீதியான ஆதிக்கத்தைக் கொண்ட தொன்மப் படிமங்களையும் அஜந்தகுமாரின் கவிதைகளில் காணலாம். ‘ஒளிப்பிழம்பை வினாவுதல்’ கவிதையில் இந்தத் தொன்பங்கள் படிமங்களாய் உலவுகின்றன.

இங்கு தன்னுணர்வுத் தன்மைகளையே முழுமையாக காணமுடிகிறது. அண்மைக்கால படைப்பு நிலை விவாதங்களில் பேசுபொருளாக இருக்கும் அகமி{ சுயம் (ளுரடிதநஉவ ழக ளநடக) தொடர்பான ஓர் அழுத்தமான வெளிப்பாட்டினை இத்தொகுப்பில் கண்டுகொள்ளமுடிகிறது.

‘நான்’ என்பதற்கான விருப்புத் தேர்வுகள் கொண்டிருக்கக் கூடிய நிலை இந்த அகமியை{ சுயத்தினை உற்பத்தி செய்துவிடுகிறது.

குறிப்பாக ‘காதல்’ தொடர்பான கவிதைகள்.

இந்த அடிப்படையில் அஜந்தகுமாரின் ‘நான்’ உருவாக்கும் அடையாளப்படுத்தல்கள் என்ன என்பதனை கவிதைகள் பேசுகின்றன.

அதனை நாம் அவர் சித்தரிக்கிறாரா அல்லது உருவாக்குகின்றாரா என்ற விவாதத்திற்கு போகாமல் அடையாளம் காணமுனைவோம்.

இந்த அடையாளங்களில் நாம் பார்த்த தனித்துவம் சார் அடையாளங்களை விட குழு அடையாளங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்று அடிப்படையில் “சிறுபான்மை இனச் சொல்லாடல்கள்” இன்று அதிகமாக பேசப்படும் ஒன்றாக இருக்கின்ற நிலையில் அஜந்தகுமாரிடமும் இனத்துவம் சார் தூண்டல்களை கவிதைகள் பேசுகின்றன.

இவ்வாறான ஒரு கோட்பாட்டு சட்டகத்தை பொருத்திப் பார்ப்பது என்பது ஓர் நீண்ட ஆய்வுக்கான, விவாதத்திற்கான களத்தினை விரிக்கும்.

இங்கு ஒரு வாசகனின் இரசனைக் குறிப்புக்களாகவே அஜந்தகுமாரின் கவிதைகளை அடையாளங் கண்டுள்ளேன்.

‘சோம்பேறியின் கடல்’ கவிதைகளை வசதி கருதி பின்வரும் அடிப்படைகளில் பார்க்க முனைகிறேன். அந்தவகையில் சமூக இருப்பினை அடையாளப்படுத்துகிற அல்லது இருப்பினால் அந்தரிக்கின்ற கவிதைகள் சில. வாழ்க்கையின் புதிர்களில் தோல்வியாலும் அச்சத்தாலும் நிரம்புகின்றன மனவெளிகள்.
‘சும்மா இருக்கிறேன்’
நிமிர்விற்கான ஒத்திகைகளோடும்
உண்மை நிமிர்விற்கான பொழுதுகளோடும்
சேர்ந்தென்னைத் தின்று கொண்டிருக்கின்றன.
வாழ்வின் வெறுமையான கணங்களிற் பசியைப் பார்க்க முடிகிறது. ‘புதிர்ப் பொழுதுகளும் வாழ்வும்’ எனும் கவிதையில்
எனதிருப்பின் நிர்ணயங்கள்
நிர்வாணப்படுத்தப்படலாயிற்று
இவ்வாறு வந்துவிழும் வார்த்தைகள் சூழலின் வக்கிரத்தை அனுபவமாக்குகின்றது.

அதேபோல் வாழ்வுதரும் அச்சம் போர்களின் தடங்களிலிருந்து வெளிப்படுகிறது. ‘ஞாபகங்களின் அச்சக்கோடுகள்’ இல்,
எனது இரகசியங்களின்
திசை வழிப்பயணங்களை
பிசைந்தபடி செல்கிறது
இருளின் கரம்!
இந்த வகையில் ‘நிர்வாணத் தெருவும் கவிஞனின் வலியும்’ கவிதையும் நோக்கத்தக்கது.

இந்தக் கவிதைகளில் ஒரு கவிஞனுக்கு இருக்கவேண்டிய சமூகப் பார்வையை இனங்காணலாம். இக்கவிதைகளில் அஜந்தகுமார் தனக்கான அந்தரங்கப் படிமங்களை இனங்கண்டிருந்தால் கவிதைகள் தரும் அனுபவவெளி இன்னமும் விரிந்திருக்கும்.

சோம்பேறியின் கடலில் காதல் உணர்வுநிலைசார் கவிதைகளும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. உலக அளவில் கவிதைகளின் பேசுபொருளில் கவிதைக்கும் காதலுக்குமிடையே ஒரு ஒத்திசைவினை காணமுடிகிறது. நவீன கவிதை மரபில் நெருடா{ மாயகோவ்ஸ்கி ஆகிய இருவரினது கவிதைகளிலும் காதல், புரட்சி பாதிபாதியாய் இருப்பதனை காணலாம்.

இங்கு அஜந்தகுமாரின் கவிதைகளில் இந்த மென்னுணர்வினையும் தரிசிக்க முடிகிறது.

இழைபிரிந்த மௌனங்களின் கதைச் சித்திரமாக மனங்களில் பாரமேற்றுகின்றன.

சமூக கட்டுக்களில், விரும்பிய வாழ்வுக்கான அந்தரிப்பு அடங்கிப்போகும் மன உணர்வாக, நம்பிக்கையின் காத்திருப்பாக, நிறைவேற முடியாத கதையின் முடிவாக வாழ்க்கையை நினைவுக் குறிப்புக்குள்ளாக்கின்றன.

‘எதிர்காலம் குறித்து’, ‘நீண்ட காத்திருப்பு’, ‘காதல் வழிப்போக்கனோடு நடந்து வரும் இயற்கை’, ‘அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்’ என கவிதைகள் வாசித்த பின்னும் மனதில் ஓடுகின்றன.

இங்கு பல்லி + வீடு + நான் + அவள் எனும் கவிதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. உண்மையில் சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், பஞ்சாங்கங்கள் மீது மிகுந்த விமர்சனங்கொண்ட பாவனைகளை அநேக கவிதைகள் காணமுடிந்தாலும் அவற்றினை முற்றாக நிராகரித்துச் சென்றுவிட முடியாத மனத் தளம்பலையும் காணமுடிகிறது.
‘மீண்டும் மீண்டுமாய்
பல்லிகளின் வாழ்க்கைக்கும்
என் வாழ்க்கைக்கும்
முடிச்சுக்கள் இறுகுகின்றன
பஞ்சாங்கமும் கையுமாய்
என் நாள்ப் பொழுதுகளை நிறைக்கிறேன்’
‘நீயெனக்கு இல்லையென்றான இரவு’ எனும் கவிதையின் சொற்படிமங்கள் அழகாய் வந்துள்ளன.
நம்பிக்கைச் சுவர்களிடை
நாம் அகப்பட்டோம்
சுவர்கள்
மிகச் சாதாரணமாய்
இரத்தம் உறிஞ்சிக் குடித்து
கோதாய் எறிந்தன காதலை.
இவற்றினை விட சாதாரண மனிதனிடம் இருக்கக்கூடிய உள்மனிதன்சார் கற்பனையாக ‘என்னிலிருந்து வெளியேறும்’ ஒருவன் கவிதை அமைந்துள்ளது. அதேபோல் சக மனிதனை நம்பமுடியாத வாழ்வின் அச்சமும் அது தரும் துரோகமும் ‘புன்னகைகளின் வடிவங்கள்’ இல் வெளிப்பட்டுள்ளது.
....
என் முன்னால்
நீலம் பாரித்த ஒரு நதி
ஓடிக் கொண்டிருக்கிறது.
சமகால அரசியல் குழைந்த வாழ்வின் விமர்சனமாக ‘ஒளிப்பிழம்பை வினாவுதல்’ஐ குறிப்பிடலாம். கவிதை வடிவம் அல்லது அது உருவாக்கியுள்ள தொனி மிகவும் இரசனைக்குரியதாகவும் அஜந்தகுமாரின் இயல்பான வெளிப்பாட்டு முறையிலிருந்து சற்று மாறுபட்டதாகவும் அமைந்துள்ளது.

நான் மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கி கதறியழ|
நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு
நெற்றிக் கண்ணிலிருந்து
பிள்ளைகளை உற்பவி!
அஜந்தகுமாரின் அகமனம் தன்னுடைய மரபிலிருந்து பிம்பங்களை தொல் படிமங்களாக இக் கவிதையில் படைத்துள்ளது.

சோம்பேறியாய் அடங்கிக்கிடக்கும் கவிஞனின் கடல் ஆர்ப்பரிக்கிறது.

‘ஆர்ப்பரிக்கும் என் கடல்’ எனும் இறுதிக் கவிதையில் வாழ்க்கை மீதான நம்பிக்கையும் வாழ்தலின் மீதான ஆர்வமும் பளிச்சிடுகிறது.

ஒளியின் தூவலில்
நான் பட்டுத் தெறிக்கிறேன்
வானம் எனக்குள் இறங்கி
லாவண்யம் பொழிகிறது
அஜந்தகுமாரின் கவிதைக்கான தலைப்புகள் எல்லாம் கவித்துவத்தால் நிறைந்தனவாய் என்னால் உணரமுடிகிறது.
ஒரு சோம்பேறியின் கடல்
பல்லி + வீடு + நான் + அவள்
வல்லமையைச் சந்தேகித்தலாய வல்லமை
என்பன எடுத்துக்காட்டுக்கள்.
அஜந்தகுமார் குறிப்பிட்டது போல சொற்கள் மீது அவருக்கிருக்கும் ஆர்வமும் அதைத் தேர்வு செய்வதிலுள்ள நேர்த்தியும் சொல்ல வேண்டிய ஒன்று.
- புதிர்ப்பொழுதுகளை திணித்தே
- இரகசியங்களின் தலைவழிப் பயணங்கள்
- மழையை வாசிக்க{ எந்தன் ஆசைகள் நடக்க
சில கவிதைகள் முடிந்த பின்னும் தொடருவதாய் ஒரு உணர்வை எனக்குத் தருகின்றன.
‘மயிர்கொட்டியும் வண்ணத்துப்பூச்சியும்’
‘நீண்ட காத்திருப்பு’
‘உன் தவறும் என் சக்தியும்’
எனது பார்வையில் இவ்வாறான கவிதைகள், கவிதைக்கான செட்டினை{ இறுக்கத்தினை உடைத்துவிடும் அபாயத்தினை தரும் எனவே கருதுகிறேன். கவிதையில் நீளும் வார்த்தைகளைக் களைவது கவிதைகளின் கவித்துவத்தினை இன்னமும் மெருகேற்றுவதாக அமையும்.
சில கவிதைகள் அஜந்தகுமாரின் கவித்துவ வீச்சிலிருந்து மாறுபட்டதாய் உணர வைக்கிறது.
குறிப்பாக உருக்குலைந்த என் கவிதைகள் எனும் தலைப்பிலான கவிதை, இதில் சாதாரண விபரணத் தன்மை வெளிப்படுகிறது என்பது எனது வாசிப்பு. இப்படியான சில பலவீனங்களை தவிர்க்கும் மொழி வீச்சும் கவித்துவமும் அஜந்தகுமாருக்கு உண்டு என்பதற்கு சோம்பேறியின் கடலே சாட்சியமாயுள்ளது.



த. அஜந்தகுமார்


----தேவமுகுந்தன்
பதினோராம் ஆண்டில் கல்வி கற்றபோது அக்காலத்தில் வெளிவரத்தொடங்கிய “திசை” அறிமுகமாயிற்று. வழமையான பத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்பவற்றில் வெளியான இலக்கியப் படைப்புகளை விட திசையில் வெளியான ஆக்கங்கள் வித்தியாசமான அனுபவங்களை ஊட்டின. சிறுகதை, கவிதை,விமர்சனம், பத்தி, சினிமா எனப் பல துறைகளில் ஈடுபாடுடைய மு.பொன்னம்பலம், அ.யேசுராசா என்போர் திசையின் ஆசிரியர் குழுவில் இருந்தமையே இவ்வித்தியாசத்திற்கு காரணமென பிற்காலத்தில் உணர்ந்தேன். இச்சிறப்புமிக்க ‘திசை’ குறுகிய காலத்தில் தனது ஆயுளை முடித்துக்கொண்டமை இலக்கிய உலகுக்கு துரதிர்ஸ்டமே.
சிறந்த சிறுகதைக்கு உதாரணமாக பேராசிரியர் கா.சிவத்தம்பியினால் விதந்துரைக்கப்படும் ‘கோசலை’ முதலில் அலையில் வெளியாகியிருந்தாலும் சிறுசஞ்சிகைச்சூழலில் பரிச்சயமற்றிருந்த சாதாரண வாசகர்கள் திசையின் மூலமே அக்கதையை வாசிக்கக் கூடியதாயிருந்தது.
ரஞ்சகுமாரின் ‘கோளறுபதிகம்’, மு.தளையசிங்கத்தின் ‘இரத்தம்’, சாந்தனின் ‘கிருஸ்ணன் தூது’நந்தியி;ன் ‘கேள்விகள் உருவாகின்றன’ போன்ற சிறந்த சிறுகதைகள் என விமர்சகர்களால் போற்றப்படும் சிறுகதைகள் புதிதாகவோ, மறுபிரசுரமாகவோ திசையில் பிரசுரமாயின.
ஏறத்தாழ இருபது வருடங்களின் பின் இக்கதைகளைப்பற்றிய மதிப்பீட்டை த.அஜந்தகுமார் எழுதிய ‘தனித்துத் தெரியும் திசை’ எனும் நூலின் வாயிலாக வாசிக்கும் போது, பழைய நினைவுகள் மனதில் எழுகின்றன. வடக்கு கிழக்கெங்கும் இந்திய ‘அமைதிப்படை’யின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டம், தமிழ் தேசிய இராணுவத்திற்கு ஆட்களைத் திரட்டவென இளைஞர்களை வலுக்கட்டாயமாக வான்களில் ஏற்றிய காலகட்டம், பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்த காலம். இக்காலகட்டத்திலேயே யாழ்ப்பாணத்தில் இருந்து திசை வெளியானது.
தனது பல்கலைக்கழக கலைமாணி ஆய்வுக்காக சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையை த.அஜந்தகுமார் நூலாக்கியுள்ளார். இந்நூலினைப் படிக்கும் போது, இவர் இந்நூலிற்காக பட்ட பிரயத்தனத்தை உணரமுடிகிறது. இந்நூலினுள்,
1. ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகள்
2. திசை இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு
3. திசை சிறுகதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும்
4. மதிப்பீடு
என நான்கு அத்தியாயங்கள் காணப்படுகின்றன.
முதலாம் அத்தியாயத்தில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகள் எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளனவென பொருத்தமான ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.
ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகை என்னும் உபதலைப்பில் உதயதாரகை, ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி, தினகரன், சஞ்சீவி, முரசொலி, திசை, சரிநிகர், தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் ஆகிய பத்திரிகைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனவென விளக்கப்பட்டுள்ளது. 1998 இல் இருந்து வெளியாகும் தினக்குரல் என அஜந்தகுமார் குறிப்பிடுவது தவறாகும். உண்மையில் தினக்குரல் 1997 இல் இருந்து வெளியாகிறது. இந்நூலுக்கு அடுத்த பதிப்பு வெளியாகுமெனின் இச் சிறுதவறு சீர் செய்யப்படுதல் வேண்டும்.
ஈழத்தில் பிரதேச பத்திரிகைகளின் தோற்றம், திசை வெளியான சூழல், திசையின் நோக்கம், திசையின் உள்ளடக்கம் என்பவற்றை திசை இதழின் கலை இலக்கியப் பங்களிப்பு என்ற அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன.
கலைச்சாரல், தூவானம், இளவட்டம், கவிதைகள், மொழிபெயர்ப்புக்கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், போன்ற அம்சங்கள் திசையின் கலை இலக்கியப்பங்களிப்பாக அமைந்தன. இவற்றை அஜந்தகுமார் உதாரணங்களின் மூலம் விளக்குகிறார்.
‘திசை’ சிறுகதைகளின் உள்ளடக்கமும் வெளிப்பாடும் என்ற அத்தியாயத்தில் ‘திசை’யில் வெளியான சிறுகதைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளன. இனப்பிரச்சினை தொடர்பாக திசையில் வளியான சிறுகதைகளை இராணுவச் சூழல், போர்க்காலச்சூழலும் பெண்ணும,; போர்ச்சூழலும் சிறுவர்களும், இயக்க உருவாக்கமும் முரண்பாடுகளும், இனப்பிரச்சினையும் மனிதநேயமும், போரும் இசைவாக்கமும், புலம்பெயர்வு சாதகம் -பாதகம் எனப் பகுத்து அவற்றை விளக்குகிறார்.
‘சமுதாயப்பிரச்சினை’ என்னும் தலைப்பின் கீழ் ‘திசை’யில் வெளியான சிறுகதைகளை ஆண் -பெண் உறவுச் சிக்கல்கள், சமூகமும் பெண்ணும், சமய விமர்சனம், சாதி, வேலைத்தளப்பிரச்சினைகள், நகரவாழ்வு –அந்நியம் -நெருக்கீடுகள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு இவ் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.
‘திசை’ வெளியான காலகட்டத்தில் ஈழத்தில் வெளியான ஏனைய பத்திரிகைகள் பிரசுரித்த சில சிறுகதைகளை உதாரணமாய் காட்டி அவற்றிலிருந்து திசையின் கதைகள் எவ்வாறு உயர்ந்து நிற்கின்றனவென விளக்கப்படுகின்றது.
இறுதி அத்தியாயத்தில் ‘திசை’ சிறுகதைகள் பற்றிய மதிப்பீடு முன் வைக்கப்படுகின்றது. ஒன்றரை வருடகாலம் வெளிவந்து தனது 69 இதழ்களில் 46 சிறுகதைகளைப் பிரசுரித்த திசையானது 20 இற்கும் மேற்பட்ட மிகத்தரமான கலாப+ர்வமான சிறுகதைகளைப் பிரசுரித்ததன் மூலம் தனது காத்திரமான தன்மையினால் உயர்ந்தும் தனித்தும் நிற்பதாக ‘திசை’ பற்றிய தனது மதிப்பீட்டை அஜந்தகுமார் முன்வைக்கிறார்.
இந்நூலின் பின்னிணைப்பாக திசையில் வெளியான சிறுகதைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், மல்லிகை சிறுகதைகள்….. போல் மிசை சிறுகதைகளும் தொகுக்கப்படல் வேண்டும். அவ்வாறு தொகுக்கும் போது திசையில் வெளியான சிறுகதைகளில் எவற்றைத் தவிர்ப்பது எவற்றைச் சேர்ப்பது என்ற குழப்பம் தொகுப்பாளருக்கு ஏற்படாது ஏனெனில் இக்கதைகள் யாவுமே தரத்தில் ஒன்றையொன்று விஞசி நிற்கின்றன.
‘திசை’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவரும் சஞ்சிகையாளர், சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி, சினிமா எனப் பல்பரிமாணங் கொண்டவருமான அ.யேசுராசா குறிப்பிடுவது போல் அஜந்தகுமாரின் இந்நூல் புதியவர்களிடையே ‘திசை’யின் முக்கியத்துவத்தை கொண்டு செல்வதுடன் பழையவர்களின் நினைவுகளைக் கிளரச் செய்கிறது.
வெறுமனே பல்கலைக்கழக ஆய்வுக்காக எழுதாமல் ‘சீரியசாக’ இந்நூலினை எழுதி வெளியிட்ட த. அஜந்தகுமாரை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.




த. அஜந்தகுமார்
---கமலசுதர்சன்

எந்த இடத்திலும் பாய்ந்து செல்லும் வெள்ளம் கவிஞனின் உள்ளம். அவனது கவிதைகளில் ஏன் ? எப்படி ? என்ற கேள்விகள் எழுமானால் கேள்வியை எழுப்பியவர்கள்தான் பதில் சொல்லவேண்டுமே தவிர அது கவிஞனின் வேலையல்ல. அவன் சொல்வதெல்லாம் அவனுக்கு நியாயமே. யாருக்கு எது பிடிக்கும் என்று தேடிப்பார்த்து அவன் பரிமாறமுடியாது.
அவன் விரித்த பந்தி…..!
அவன் போட்ட இலை….!
அவன் வைக்கின்ற உணவு

பசிக்கின்ற நல்ல வயிறு உள்ளவர்கள் அங்கே அமரலாம். யார் யாருக்குப் பசிக்குமென்று அவன் கண்டுபிடிக்கமுடியாது. ஆகவே , தான் என்ற நிலையிலிருந்து தனக்காக என்ற ஆசையோடு அவன் படைக்கின்ற விருந்துதான் சமூகத்தின் முன்னால் வைக்கப்படுகிறது.கவியரசு கண்ணதாசனின் காலத்தை வென்று நிற்கும் மேற்கூறிய வார்த்தைகளை நானும் வழிமொழிந்து த.அஜந்தகுமாரின் ‘ஒரு சோம்பேறியின் கடலில்’ என் பாதங்களை வைக்கிறேன்.
நூலின் அட்டைப்படத்துள் வாத்துகள் வரையப்பட்டுள்ளன. பின்னணியில் நீலவர்ணம் தீட்டப்பட்டுள்ளது. வாத்துகள் மெல்ல நடைபயில்வன. ஆகவே நூலின் தலைப்பிற்கேற்ப இவை பொருத்தப்பாடு உடையன. இந்நூல் அவையத்து முந்தியிருப்பச் செய்த தந்தைக்கும் , ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் அன்னைக்கும் சமர்ப்பணமானது நெஞ்சைத் தொடுகின்றது.

யதார்த்த சமூகத்தோடு போராடித் தோற்கின்ற நிலையை இக்கவிதைகளில் காண்கிறோம். ‘சும்மா இருக்கிறேன்’ கவிதையில்,
‘முயற்சி ஏணியில் ஏறும்போது
சறுக்கும் பொழுதுகள்
நிமிர்விற்கான ஒத்திகைகளோடும்
உண்மை நிமிர்விற்கான பொழுதுகளோடும்
சேர்த்தென்னைத் தின்று கொண்டிருக்;கின்றன’
சாண் ஏற முழம் சறுக்கும் நிலையை – உயர்ச்சிக்கு மிஞ்சிய தளர்ச்சியை அவதானிக்கிறோம். இந்நிலையைப் ‘புதிர்ப்பொழுதுகளும் வாழ்வும்’ கவிதையில்,

‘என்வாழ்வின்
சின்ன வட்டமும்
சிதைந்தழிந்து போமோவென்று
துயரொன்று படர்கிறது’
ஊர் வாயை மூடமுடியாது என்பர். ‘உன்னை வினாவுதல்’ என்னும் கவிதையில்,
‘எழுதாத என் கவிதைக்கான
விமர்சனத்தை
தெருப்புழுதிகள்
சேர்ந்தெழுதி ஆரவாரிக்கின்றன’ என்று வெறும் வாயை மெல்லலை எமக்கு நினைவூட்டுகிறார்.

எம்மையெல்லாம் போர்க்காலக் குழந்தைகள் என்று கூறுவர். போரின் வடுக்களின் தாக்கத்தினை,
‘செல்லடியே தாலாட்டாய்
மாற்றங்கண்ட புத்திரனல்லவா?
நான் தூங்கிப் போனேன்’
என உணர்த்துகிறார்.
;நிர்வாணத் தெருவும் கவிஞனின் வலியும்’ கவிதையில்,
‘ இப்போதெல்லாம் தெருக்களுக்கு
உடுத்தலும் கலைத்தலும்
நிர்வாணமும்
மீண்டும் பழக்கமாகி விட்டது’ என்கிறார். எம் பாடசாலை நாட்களில் வீதியில் குருதி சொட்டி உயிர் ஒழுகும் உடலங்களை கடந்து வந்த சம்பவங்கள் இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
நம்பிக்கைகக்கும் நம்பிக்கை இழத்தலுக்கும் இடையிலான நிலையை ,
‘ கடலின் ஆழத்தில்
ஏதோவோர் மூலையில் கிடந்து
பாசி படிகிறது
நம்பிக்கை’

‘……………….
நம்பிக்கை மட்டும் சிதையாது தேங்கிற்று

நம்பிக்கை நிரப்பி
நீண்ட பொழுதுகளாய்
எந்தன் தவமிருத்தல் நீள்கிறது’

‘ இப்போது கூட நீயொரு கிளையினை
வெட்டுவதை நானுணர்வேன்
மறுபக்கமாய் இந்த விருட்சத்தில்
ஒரு துளிர்ப்பின் நிகழ்தலொன்றை
நீ கவனிக்கத் தவறுகிறாய்;’
…………………
இனி … நான் எதற்கும் தயார்
எங்கே …என் ஆயுதத்தோடு வா பார்க்கலாம்’
என்று அறைகூவும் போது நம்பிக்கை வலுவடைகிறது.
‘சிறகில்லா வாழ்வில் செல்லல்’ எனும் கவிதையில்,
“ இப்போது நானும்
பட்டத்துக்கும் வேலைக்குமாய்
படிக்கிறேன்
எல்லோரையும் போலவே” எனும் வரிகளுக்கூடாக இன்றைய கல்விமுறையைச் சாடுவதோடு, யதார்த்தத்தின் கசப்பையும் சொல்கிறார் .
கவிதையினுடைய தோற்றுவாய் குறித்து கூறும் போது ,
“ அசரீரியாய் அவளுதிர்க்கும்
வார்த்தைகள்
செவியடைந்து என்னைக்
கவியாக்கத் துடித்தன”
என்பதனூடாக உணர்த்துகிறார்.
‘நிலைத்தலின் பாங்கு ‘ கவிதையில் ,
“சிற்பி செத்திருந்தான்
சிற்பம் உயிர்த்திருந்தது” என கூறுகையில் ‘ படைப்பாளி இறந்துவிட்டான் படைப்பு இருக்கிறது’ என்னும் வாதத்தின் தொனியைக் கேட்கிறோம்.

சுந்தரராமசாமி கூறுவது போன்று ‘ படைப்பாளிக்குரிய நிம்மதியின்மையின் ஆசீர்வாதம்’ அஜந்தகுமாருக்கும் இருக்கிறது என்பதனை கவிதைகளினைப் படித்த பின் கூறமுடிகிறது. கலைஞனுக்கு இருக்கவேண்டிய திருப்தி காணாத மனம் தொடர்ந்து இயங்கவைக்கும். ‘ஒரு சோம்பேறியி;ன் கடல்’ என ஆரம்பித்த கவிதை ‘ ஆர்ப்பரிக்கும் என் கடல்” என முடிவது அழகானது, நம்பிக்கை ஊட்டுகிறது.
படிமங்கள், குறியீடுகளை கையாள்வது தொடர்பாக, கவிதைகளின் எளிமைத்தன்மை தொடர்பாக பல்வேறு வாதங்கள் இற்றைவரை முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வயது வந்த ஒருவர் ‘ நான் இப்போதும் அம்புலிமாமா கதைப்புத்தகம் வாசிக்கிறேன், சுட்டி ரீ.வி பார்க்கிறேன்’ எனக்கூறுவது அழகானதல்ல. வாசகன் தன் வாசிப்பு மட்டத்தை உயர்த்தவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
இறுதியாக அஜந்தகுமார் அவர்கள் கூறுவது போல ‘ சொற்களுக்கு அப்பால் விரிந்து செல்லும் கவிதைவெளிக்குள் நாம் சஞ்சரிக்கவேண்டும்., அந்தப் பக்குவம் எளிமையாக வாய்த்துவிடாது, அதற்கான ஒரே தகுதி, நல்ல வாசகன் என்பதுதான்’. இதுவரை சோம்பேறியின் கடலாய் இருந்;த மனம் ஆர்ப்பரிக்கும் கடலாகும்.
அஜந்தகுமார் அவர்கள் மேலும் பல ஆக்க இலக்கியங்கள், ஆய்வுகள் எனத் தமிழுலக்கு தரவேண்டும் என்பது எமது அவா.
த. அஜந்தகுமார்
---குறிஞ்சி நாடன்

நூலாசிரியர் த.அஜந்தகுமார் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். தனது கலைமாணி சிறப்புப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்வே இந்த நூல்.;. தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராகத் துலங்குகிறார். ‘புதிய தரிசனம்’ என்ற கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து இலக்கிய அனுபவம் பெற்றவர். அவரது ஆய்வுத்திறனை வெளிக்காட்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
கிழக்கிலங்கை பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா முன்னுரை வழங்கியுள்ளார். யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வாழ்த்துரை வழங்கியுள்ளார். இவ்விருவரும் நூலாசிரியர் த.அஜந்தகுமாரின் ஆற்றலை விதந்துரைத்துள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகக் கொள்ளும் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் நூலாக வெளிவருவது இலக்கியவுலகிற்குப் புதிய வரவாகும். ஈழத்து இலக்கிய வார்ப்புகளை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிடுவது அண்மைக்காலங்களில் மிகுதியாகத் தென்படுகிறது. இது ஓர் ஆரோக்கியமான இலக்கிய செயற்பாடாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நூலாசிரியர் ‘திசை’ என்ற சிறு பத்திரிகையின் வரவையும் அதன் செயற்பாடுகளையும் இலக்கியவுலகிற்கும் சமூகத்திற்கும் அது ஆற்றிய பணிகளையும் விரிவாக ஆராய்ந்துள்ளார். அதற்கான உசாத்தணை நூல்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். தனது ஆய்வுக்கு வலிவு சேர்ப்பதற்காக நவீன இலக்கிய வளர்ச்சிக்கு சிறு சஞ்சிகைகளும் பிரதேச, தேசிய பத்திரிகைகளும் அளித்த பங்களிப்பினை நூலின் முதலாவது இயலில் சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்பவற்றில் தோன்றிப் பங்களிப்புச் செய்த சிறு சஞ்சிகைகள் பற்றி விளக்கமாகக் கூறி ‘திசை’ என்கின்ற சிறுசஞ்சிகையின் வரவு, சூழல், அதனது பணி, தாக்கம் என்பவற்றை முழுமையாக ஆராய்ந்து தனது பணியை நிறைவேற்றியுள்ளார். இவரது ஆய்வு எதிர்காலத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபடப்போகும் இளம் ஆய்வாளர்களுக்கு உதவுகரமாக இருக்கும் என்பதைத் துணிந்து கூறலாம். பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் மலர்ந்து மறைந்த இதழ்கள் பற்றி அவை தோன்றிய ஆண்டுகளுடன் தந்துள்ளார்.
‘திசை’ 14.01.1989 இல் யாழ்ப்பாணம் நியூ ஈறா பப்ளிக்கேசன் மூலமாக வெளிவந்தது. இது ‘சற்றடே வியூ’ என்னும் பத்திரிகையின் சகோதரப்பத்திரிகை. முதல் வருடம் 51 இதழ்களும் இரண்டாம் வருடம் 18 இதழ்களுமாக மொத்தம் 69 இதழ்கள் வெளிவந்தன. பன்னிரண்டு பக்கங்களைக் கொண்ட அப்பத்திரிகையில் உருளும் உலகில், திசையின் முகம், தோழி, சமூகம், கலைச்சாரல், துவானம், சிறுகதை, போன்ற பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சமூகம், கல்வி, பண்பாடு. பெண் என்பவற்றில் அது பதித்த தாக்கம் பற்றியும் நூலாசிரியர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். திசையில் வெளிவந்த சிறுகதைகள், அவைகளை எழுதியவர்கள் பெயர்களுடன் ஒரு பட்டியலையும் நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். அவரது முயற்சி பாராட்டுக்குரியது. வுழிகாட்டக் கூடியது.

நன்றி:
-ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை
பெப்ரவரி 2010