த. அஜந்தகுமார்



----ந.மயூரரூபன்


“கவிஞன் அவன் கவிதையின் தந்தை|
மொழிதான் அக்கவிதையின் தாய்” என்பது ஒரு கவிஞனின் கூற்று.

ஒரு கவிதையை அடையாளப்படுத்துவதற்கு அல்லது அதனை விளங்கிக் கொள்வதற்கென நாம் ஏற்கனனே எமக்குள் வைத்திருக்கும் சட்டகத்தினை அதன்மேல் அழுத்திப் பார்க்கிறோம். கவிதைகள் எல்லாச் சட்டகத்துக்குள்ளும் அடங்குபவையல்ல. படைப்பின் இயல்பே அதுதான்.

கவிதை என்பது ஒரு மனநிகழ்வு என்பது அநேக கவிஞர்களினதும் விமர்சகர்களினதும் பதிவு. அந்தவகையில் ஒரு கவிதை அது சொல்லும் கருத்தால் மட்டும் எங்களை கவர்ந்துவிடாது சொல்லப்படும் முறையால் தனியிடம் பெறுவது ஆகும்.

இங்கு கவிதை கொண்டிருக்கும் தளங்களை அடையாளம் காட்டுகிறார்கள்.

கவிதை சொற்களைப் படிமங்களாக ஆக்கும் கலை
கவிதையின் வாசக இடைவெளி அல்லது மௌனம் அதன் ஒவ்வொரு சொற்களுக்கு இடையேயும் உள்ளது.
கவிதை ஒவ்வொரு முறையும் மொழியின் புதிய சாத்தியப்பாடு ஒன்றை நிகழ்த்துகிறது.

இவை மொழிசார் படைப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொதிந்திருப்பவை. ஆக, கவிதையின் உயிர், அதன் மொழியின் பயன்பாட்டிலே உருக்கொள்கிறது.

ஒரு படைப்பினை புரிந்துகொள்ளல் என்பது இன்று பிரச்சினையாய் இருக்கிறது. புரியாமை படைப்பாளியின் மீது எதிருணர்வைத் தருகிறது. படைப்பை ஒதுக்குகிறது.

கவனமற்று படிக்கப்படாமல் இருக்கும் படைப்புத்தான் புரியாமல் அமையும். படிப்பதில் கடினமான உழைப்பை ஒருவரும் செலுத்துவதில்லை.

“ஒரு படைப்பு புரியவில்லை என்று ஒருவர் சொன்னால் உடனடியாக எத்தனை தடவை படித்தீர்கள் என்று கேட்பது சுந்தரராமசாமியின் வழக்கம். அநேகமாக அனைவரும் ஒருமுறை என்றுதான் சொல்வார்கள். எட்டாம் வகுப்பு கணிதத்தை ஒரு தடவை படித்து உங்களால் புரிந்து கொள்ள முடியுமா என்பார் சுந்தரராமசாமி. எட்டாம் வகுப்புப் பாடத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட நீங்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கவில்லை என்றுதானே பொருள் என்று கேட்பார்” (ஜெயமோகன் 2007)

உண்மையில் கலை, அதன் அடிப்படைகளை புரியும்போது தான் எம்மிடம் வருகிறது.

இலக்கியப் படைப்பினை விளங்கிக்கொள்ள மொழியின் சாத்தியப்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும். ஜெயமோகன் சொல்வது போல படைப்பு மொழி என்பது அதற்கான தொல்படிமம், பொதுப் படிமம், அந்தரங்கப் படிமம் என்பவற்றை இணைத்ததாயே காணப்படுகிறது.

எங்களது அகமனம் வாசிப்புடன் இணைகிறபோது அது ஒரு பயிற்சியாக, சொற்கள்{ படிமங்கள் தொடர்பான ஒரு விழிப்பாக அமையும்.

ஒரு படைப்பாளியிடம்{ கவிஞனிடம் ஏற்படும் அகத் தூண்டலுடன் தற்செயல் தன்மை சேரும்போது படைப்பு உருவாகிறது எனச் சொல்வார்கள். அஜந்தகுமாரிடமும் இந்த அகத்தூண்டலும் தற்செயல்களும் அநேக கவிதைகளில் உள்ளன. ‘சுவரில் போகும் பல்லி’ ‘கத்திக் கொண்டிருக்கும் பூனை’ என அகத்தூண்டலும் தற்செயல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

படைப்பாளிகளுக்கு அந்தரங்கமான படிமங்கள் இருப்பதுண்டு. பசுவய்யாவின் கவிதைகளில் கடல் மீண்டும் மீண்டும் வருகின்ற படிமமாக இருக்கின்றது. அஜந்தகுமாரின் கவிதைகளில் அந்தரங்க படிமங்களை மேலெழுந்தவாரியாக இனங்காண முடியவில்லை. ‘கடல்’ வண்ணத்துப்பூச்சி, பூனை அனைத்தும் பொதுப்படிமமாயே இங்கு வாசிக்கப்படலாம். அஜந்தகுமாரின் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவான அவரின் அந்தரங்கமான படிமத்தை சொற்களாயின்றி உணர்வுகளாயே அடையாளங் காணமுடிகிறது. எதிலும் துயரத்தின் சாயைiளே படிந்திருக்கின்றன.

அதேபோல் படைப்பாளிகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற தொல்படிமங்களும் வாசிப்பு வெளிகளை விரிக்கின்றன. மரபு ரீதியான ஆதிக்கத்தைக் கொண்ட தொன்மப் படிமங்களையும் அஜந்தகுமாரின் கவிதைகளில் காணலாம். ‘ஒளிப்பிழம்பை வினாவுதல்’ கவிதையில் இந்தத் தொன்பங்கள் படிமங்களாய் உலவுகின்றன.

இங்கு தன்னுணர்வுத் தன்மைகளையே முழுமையாக காணமுடிகிறது. அண்மைக்கால படைப்பு நிலை விவாதங்களில் பேசுபொருளாக இருக்கும் அகமி{ சுயம் (ளுரடிதநஉவ ழக ளநடக) தொடர்பான ஓர் அழுத்தமான வெளிப்பாட்டினை இத்தொகுப்பில் கண்டுகொள்ளமுடிகிறது.

‘நான்’ என்பதற்கான விருப்புத் தேர்வுகள் கொண்டிருக்கக் கூடிய நிலை இந்த அகமியை{ சுயத்தினை உற்பத்தி செய்துவிடுகிறது.

குறிப்பாக ‘காதல்’ தொடர்பான கவிதைகள்.

இந்த அடிப்படையில் அஜந்தகுமாரின் ‘நான்’ உருவாக்கும் அடையாளப்படுத்தல்கள் என்ன என்பதனை கவிதைகள் பேசுகின்றன.

அதனை நாம் அவர் சித்தரிக்கிறாரா அல்லது உருவாக்குகின்றாரா என்ற விவாதத்திற்கு போகாமல் அடையாளம் காணமுனைவோம்.

இந்த அடையாளங்களில் நாம் பார்த்த தனித்துவம் சார் அடையாளங்களை விட குழு அடையாளங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்று அடிப்படையில் “சிறுபான்மை இனச் சொல்லாடல்கள்” இன்று அதிகமாக பேசப்படும் ஒன்றாக இருக்கின்ற நிலையில் அஜந்தகுமாரிடமும் இனத்துவம் சார் தூண்டல்களை கவிதைகள் பேசுகின்றன.

இவ்வாறான ஒரு கோட்பாட்டு சட்டகத்தை பொருத்திப் பார்ப்பது என்பது ஓர் நீண்ட ஆய்வுக்கான, விவாதத்திற்கான களத்தினை விரிக்கும்.

இங்கு ஒரு வாசகனின் இரசனைக் குறிப்புக்களாகவே அஜந்தகுமாரின் கவிதைகளை அடையாளங் கண்டுள்ளேன்.

‘சோம்பேறியின் கடல்’ கவிதைகளை வசதி கருதி பின்வரும் அடிப்படைகளில் பார்க்க முனைகிறேன். அந்தவகையில் சமூக இருப்பினை அடையாளப்படுத்துகிற அல்லது இருப்பினால் அந்தரிக்கின்ற கவிதைகள் சில. வாழ்க்கையின் புதிர்களில் தோல்வியாலும் அச்சத்தாலும் நிரம்புகின்றன மனவெளிகள்.
‘சும்மா இருக்கிறேன்’
நிமிர்விற்கான ஒத்திகைகளோடும்
உண்மை நிமிர்விற்கான பொழுதுகளோடும்
சேர்ந்தென்னைத் தின்று கொண்டிருக்கின்றன.
வாழ்வின் வெறுமையான கணங்களிற் பசியைப் பார்க்க முடிகிறது. ‘புதிர்ப் பொழுதுகளும் வாழ்வும்’ எனும் கவிதையில்
எனதிருப்பின் நிர்ணயங்கள்
நிர்வாணப்படுத்தப்படலாயிற்று
இவ்வாறு வந்துவிழும் வார்த்தைகள் சூழலின் வக்கிரத்தை அனுபவமாக்குகின்றது.

அதேபோல் வாழ்வுதரும் அச்சம் போர்களின் தடங்களிலிருந்து வெளிப்படுகிறது. ‘ஞாபகங்களின் அச்சக்கோடுகள்’ இல்,
எனது இரகசியங்களின்
திசை வழிப்பயணங்களை
பிசைந்தபடி செல்கிறது
இருளின் கரம்!
இந்த வகையில் ‘நிர்வாணத் தெருவும் கவிஞனின் வலியும்’ கவிதையும் நோக்கத்தக்கது.

இந்தக் கவிதைகளில் ஒரு கவிஞனுக்கு இருக்கவேண்டிய சமூகப் பார்வையை இனங்காணலாம். இக்கவிதைகளில் அஜந்தகுமார் தனக்கான அந்தரங்கப் படிமங்களை இனங்கண்டிருந்தால் கவிதைகள் தரும் அனுபவவெளி இன்னமும் விரிந்திருக்கும்.

சோம்பேறியின் கடலில் காதல் உணர்வுநிலைசார் கவிதைகளும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. உலக அளவில் கவிதைகளின் பேசுபொருளில் கவிதைக்கும் காதலுக்குமிடையே ஒரு ஒத்திசைவினை காணமுடிகிறது. நவீன கவிதை மரபில் நெருடா{ மாயகோவ்ஸ்கி ஆகிய இருவரினது கவிதைகளிலும் காதல், புரட்சி பாதிபாதியாய் இருப்பதனை காணலாம்.

இங்கு அஜந்தகுமாரின் கவிதைகளில் இந்த மென்னுணர்வினையும் தரிசிக்க முடிகிறது.

இழைபிரிந்த மௌனங்களின் கதைச் சித்திரமாக மனங்களில் பாரமேற்றுகின்றன.

சமூக கட்டுக்களில், விரும்பிய வாழ்வுக்கான அந்தரிப்பு அடங்கிப்போகும் மன உணர்வாக, நம்பிக்கையின் காத்திருப்பாக, நிறைவேற முடியாத கதையின் முடிவாக வாழ்க்கையை நினைவுக் குறிப்புக்குள்ளாக்கின்றன.

‘எதிர்காலம் குறித்து’, ‘நீண்ட காத்திருப்பு’, ‘காதல் வழிப்போக்கனோடு நடந்து வரும் இயற்கை’, ‘அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்’ என கவிதைகள் வாசித்த பின்னும் மனதில் ஓடுகின்றன.

இங்கு பல்லி + வீடு + நான் + அவள் எனும் கவிதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. உண்மையில் சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், பஞ்சாங்கங்கள் மீது மிகுந்த விமர்சனங்கொண்ட பாவனைகளை அநேக கவிதைகள் காணமுடிந்தாலும் அவற்றினை முற்றாக நிராகரித்துச் சென்றுவிட முடியாத மனத் தளம்பலையும் காணமுடிகிறது.
‘மீண்டும் மீண்டுமாய்
பல்லிகளின் வாழ்க்கைக்கும்
என் வாழ்க்கைக்கும்
முடிச்சுக்கள் இறுகுகின்றன
பஞ்சாங்கமும் கையுமாய்
என் நாள்ப் பொழுதுகளை நிறைக்கிறேன்’
‘நீயெனக்கு இல்லையென்றான இரவு’ எனும் கவிதையின் சொற்படிமங்கள் அழகாய் வந்துள்ளன.
நம்பிக்கைச் சுவர்களிடை
நாம் அகப்பட்டோம்
சுவர்கள்
மிகச் சாதாரணமாய்
இரத்தம் உறிஞ்சிக் குடித்து
கோதாய் எறிந்தன காதலை.
இவற்றினை விட சாதாரண மனிதனிடம் இருக்கக்கூடிய உள்மனிதன்சார் கற்பனையாக ‘என்னிலிருந்து வெளியேறும்’ ஒருவன் கவிதை அமைந்துள்ளது. அதேபோல் சக மனிதனை நம்பமுடியாத வாழ்வின் அச்சமும் அது தரும் துரோகமும் ‘புன்னகைகளின் வடிவங்கள்’ இல் வெளிப்பட்டுள்ளது.
....
என் முன்னால்
நீலம் பாரித்த ஒரு நதி
ஓடிக் கொண்டிருக்கிறது.
சமகால அரசியல் குழைந்த வாழ்வின் விமர்சனமாக ‘ஒளிப்பிழம்பை வினாவுதல்’ஐ குறிப்பிடலாம். கவிதை வடிவம் அல்லது அது உருவாக்கியுள்ள தொனி மிகவும் இரசனைக்குரியதாகவும் அஜந்தகுமாரின் இயல்பான வெளிப்பாட்டு முறையிலிருந்து சற்று மாறுபட்டதாகவும் அமைந்துள்ளது.

நான் மனையாளை, மகவை
மண்ணில் புதைத்த துயரில்
கலங்கி கதறியழ|
நீ
மீண்டும் மீண்டுமாய்
உன் பிராட்டியோடு முயங்கு
நெற்றிக் கண்ணிலிருந்து
பிள்ளைகளை உற்பவி!
அஜந்தகுமாரின் அகமனம் தன்னுடைய மரபிலிருந்து பிம்பங்களை தொல் படிமங்களாக இக் கவிதையில் படைத்துள்ளது.

சோம்பேறியாய் அடங்கிக்கிடக்கும் கவிஞனின் கடல் ஆர்ப்பரிக்கிறது.

‘ஆர்ப்பரிக்கும் என் கடல்’ எனும் இறுதிக் கவிதையில் வாழ்க்கை மீதான நம்பிக்கையும் வாழ்தலின் மீதான ஆர்வமும் பளிச்சிடுகிறது.

ஒளியின் தூவலில்
நான் பட்டுத் தெறிக்கிறேன்
வானம் எனக்குள் இறங்கி
லாவண்யம் பொழிகிறது
அஜந்தகுமாரின் கவிதைக்கான தலைப்புகள் எல்லாம் கவித்துவத்தால் நிறைந்தனவாய் என்னால் உணரமுடிகிறது.
ஒரு சோம்பேறியின் கடல்
பல்லி + வீடு + நான் + அவள்
வல்லமையைச் சந்தேகித்தலாய வல்லமை
என்பன எடுத்துக்காட்டுக்கள்.
அஜந்தகுமார் குறிப்பிட்டது போல சொற்கள் மீது அவருக்கிருக்கும் ஆர்வமும் அதைத் தேர்வு செய்வதிலுள்ள நேர்த்தியும் சொல்ல வேண்டிய ஒன்று.
- புதிர்ப்பொழுதுகளை திணித்தே
- இரகசியங்களின் தலைவழிப் பயணங்கள்
- மழையை வாசிக்க{ எந்தன் ஆசைகள் நடக்க
சில கவிதைகள் முடிந்த பின்னும் தொடருவதாய் ஒரு உணர்வை எனக்குத் தருகின்றன.
‘மயிர்கொட்டியும் வண்ணத்துப்பூச்சியும்’
‘நீண்ட காத்திருப்பு’
‘உன் தவறும் என் சக்தியும்’
எனது பார்வையில் இவ்வாறான கவிதைகள், கவிதைக்கான செட்டினை{ இறுக்கத்தினை உடைத்துவிடும் அபாயத்தினை தரும் எனவே கருதுகிறேன். கவிதையில் நீளும் வார்த்தைகளைக் களைவது கவிதைகளின் கவித்துவத்தினை இன்னமும் மெருகேற்றுவதாக அமையும்.
சில கவிதைகள் அஜந்தகுமாரின் கவித்துவ வீச்சிலிருந்து மாறுபட்டதாய் உணர வைக்கிறது.
குறிப்பாக உருக்குலைந்த என் கவிதைகள் எனும் தலைப்பிலான கவிதை, இதில் சாதாரண விபரணத் தன்மை வெளிப்படுகிறது என்பது எனது வாசிப்பு. இப்படியான சில பலவீனங்களை தவிர்க்கும் மொழி வீச்சும் கவித்துவமும் அஜந்தகுமாருக்கு உண்டு என்பதற்கு சோம்பேறியின் கடலே சாட்சியமாயுள்ளது.



0 Responses

Post a Comment